சிறப்பு செய்திகள் தமிழகம்

அரக்கோணம் ஆதிதிராவிடர் பள்ளியில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய கட்டடங்கள் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 4.2.2020 அன்று தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலா 36 வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளிக் கட்டடங்களை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், 15 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான 7 விடுதிக் கட்டடங்கள், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான கட்டடங்கள் மற்றும் பழங்குடியினர் நல மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நிலைய விடுதிக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலமாக தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியருக்கான பள்ளிக் கட்டடங்கள், விடுதிக் கட்டடங்கள், தொழிற்பயிற்சி நிலையக் கட்டடங்கள், நவீன சமுதாய நலக் கூடங்கள் போன்ற கட்டுமானப் பணிகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களையும், இளைஞர்களுக்கான திறன் வளர்த்தல் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலா 36 வகுப்பறைகளைக் கொண்ட புதிய பள்ளிக் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், சென்னை மாவட்டம் புளியந்தோப்பு, திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டம் பதுவஞ்சேரி, கிளாம்பாக்கம் மற்றும் பாலூர், கோயம்புத்தூர் மாவட்டம் வெல்ஸ்புரம், திருநெல்வேலி மாவட்டம் நல்லம்மாள்புரம் ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவியல் ஆய்வகக் கூடங்கள்,

பள்ளிக் கட்டடங்கள் மற்றும் கழிவறை தொகுதிகள், மதுரை மாவட்டம் பரவை, தேனி மாவட்டம் வருசநாடு, தஞ்சாவூர் மாவட்டம் டுவிக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் சுப்ரமணியபுரம், பெரம்பலூர் மாவட்டம் நெய்குப்பை, திருவண்ணாமலை மாவட்டம் கண்ணக்குருக்கை, திருநெல்வேலி மாவட்டம் பேட்டை ஆகிய இடங்களில் 7 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான 7 விடுதிக் கட்டடங்கள்,

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரில் 1 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பழங்குடியினர் மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நிலைய விடுதிக் கட்டடம் என மொத்தம் 22 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பணியில் இருக்கும் போது காலமான 21 அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் 16 நபர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கும், 5 நபர்களுக்கு தட்டச்சர் பணியிடங்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று 7 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, தலைமைச் செயலாளர் க.சண்முகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் (பொறுப்பு) எஸ்.மதுமதி, ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் ச.முனியநாதன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெ.விஜயா ராணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.