சிறப்பு செய்திகள்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அம்மா அரசின் சாதனைகளால் 100 சதவீத வெற்றி பெறுவோம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

மதுரை:-

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அம்மா அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி 100 சதவீத வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, திருமங்கலம் தொகுதிகளில் உள்ளாட்சி தேர்தலில் தோழமை கட்சிகளுக்கு வார்டுகள் ஒதுக்கீடு சம்பந்தமாக மதுரை புறநகர் மேற்குமாவட்ட செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க சார்பில் சசி ராமன், மகாலட்சுமி, மகாசுசீந்திரன், தேமுதிக சார்பில் கணபதி அழகர்சாமி, பாலச்சந்திரன் மற்றும் த.மா.க.வை சேர்ந்த நிர்வாகிகளும், பா.ம.க நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று மக்களுக்காகவே தியாக வாழ்வை மேற்கொண்டு வாழ்ந்தவர் புரட்சித்தலைவி அம்மா. அம்மாவின் எண்ணப்படி ஒரு சிறப்பான ஆட்சியை இன்று தமிழகத்தில் முதலமைச்சர் சிறப்பாக நடத்தி வருகிறார். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார்.

இன்றைக்கு எதிர்க்கட்சிகள் எல்லாம் புரட்சித்தலைவி அம்மாவின் அரசைப் பார்த்து எந்த குறையும் கூற முடியவில்லை. அதனால்தான் ஏதாவது ஒரு பொய்யான கருத்துக்களை நாள்தோறும் கூறி வருகின்றனர். ஆனால் மக்கள் அதை ஒருபோதும் நம்பவில்லை.இந்தியாவில் 29 மாநிலங்கள் உள்ளன. அந்த மாநிலங்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக தமிழகம் உள்ளது. நித்தம் நித்தம் ஏதாவது சாதனையை முதலமைச்சர் செய்து வருகிறார்.

இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதே போல் தமிழகத்தின் தனிநபர் வருமானம் தேசிய தனிநபர் வருமானத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.தமிழகத்தில் முன்பு 4.93 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி இன்றைக்கு 8.19 சதவீதமாக உயர்ந்துள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடுக்கு பின் தமிழகத்தில் அன்னிய முதலீடுகள் 47 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாது கடந்த திமுக ஆட்சியில் மின் தட்டுப்பாடு கடுமையாக இருந்தது ஆனால் இன்றைக்கு தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது. மேலும் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் உள்ளது. என்று சமீபத்தில் வெளிவந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 3 ஆண்டுகளில் ரூ.930 கோடி ரூபாய் அளவில் தமிழகத்தில் உள்ள 4,865 ஏரி கண்மாய்கள் தூரவாரப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்றைக்கு தமிழகத்தின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.அதேபோல் கடந்த ஆண்டு தைத் திருநாளில் அனைத்து இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகும் வண்ணம் பொங்கல் தொகுப்புடன் 1000 ரூபாய் பொங்கல் பரிசை முதலமைச்சர் வழங்கினார்.

தற்போது இந்த தைத்திருநாளில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பொங்கல் தொகுப்புடன் 1000 ரூபாய் பொங்கல் பரிசை அறிவித்து அதனை தனது பொற்கரங்களால் துவக்கி வைத்துள்ளார் இதற்காக 2363 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார்.
இதுபோன்ற சாதனை திட்டங்களை அறிவித்து அதனை கடைக்கோடி மக்களுக்கும் கிடைக்கச் செய்து சாதனை படைத்து வருபவர் நமது முதலமைச்சர் அவருக்கு உறுதுணையாக இருப்பவர் தான் நமது துணை முதலமைச்சர் உள்ளாட்சித் தேர்தலில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் ஆணைக்கிணங்க கூட்டணி கட்சிகளுக்கு வார்டுகள் ஒதுக்குவது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. ஆகவே நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் முதலமைச்சரின் சாதனைகளை எடுத்துக்கூறி 100 சதவீதம் வெற்றி பெற்று சாதனை படைப்போம்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்

இந்த கூட்டத்தில் உசிலம்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி, சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.மாணிக்கம், மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன், மாவட்ட கழக துணை செயலாளர் அய்யப்பன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி, கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் எம்.இளங்கோவன், துணை செயலாளர் பா.வெற்றிவேல், ஒன்றிய கழக செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், செல்லப்பாண்டி ரவிச்சந்திரன், ராஜா, பிச்சைராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.