தற்போதைய செய்திகள்

சட்டமன்ற தேர்தலுக்கு பின் தி.மு.க. காணாமல் போய் விடும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

மதுரை:-

வடநாட்டினரிடம் கட்சியை ஸ்டாலின் அடகு வைத்து விட்டதால் வரும் சட்டமன்ற தேர்தலுக்கு பின் தி.மு.க. காணாமல் போய் விடும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் திருமங்கலத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்து பேசியதாவது:-

முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அம்மாவின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று ஆணையிட்டு உள்ளனர். அதன்படி மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் மாவட்டம் முழுவதும் அன்னதானம், விளையாட்டு போட்டிகள், நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம்க போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை ஆண்டு முழுவதும் நாம் சிறப்பாக நடத்த வேண்டும்.

மதுரையில் கடந்த ஆண்டு நடைபெற்ற அம்மாவின் பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் கழக அம்மா பேரவை சார்பில் 120 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தனர். இதனை மதுரை மாவட்ட பொதுமக்கள் பாராட்டினார்கள். தற்போது அம்மாவின் 72-வது பிறந்தநாள் விழாவை மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் முழுவதும் மாபெரும் மக்கள் விழாவாக நடத்த வேண்டும். அம்மாவின் புகழை மங்கா புகழாக உருவாக்குவதை தவிர நமக்கு வேறு என்ன லட்சியம் இருக்கிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சட்டசபையில் எனக்கு பின்னால் கழகம் நூறு ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று கூறினார். அதுவே நமக்கு வேதவாக்காகும். அம்மாவின் மறைவிற்குப் பின் இந்த ஆட்சி இன்று போகும் நாளை போகும் என்று எதிர்க்கட்சியினர் கூறினர். ஆனால் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இனிவரும் 2021-ம் ஆண்டிலும் அம்மா அரசு தான் அமையும் என்ற வகையில் சிறப்பாக ஆட்சி புரிந்து வருகிறார்.

நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். நியாயமான முறையில் தேர்தலை நடத்தி நாம் வெற்றி பெற்றுள்ளோம். திமுகவை போல குறுக்கு வழியில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை. மிக விரைவில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வர இருக்கிறது. இதில் மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சோழவந்தான், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய தொதிகளில் முதலமைச்சரின் சாதனைகளை எடுத்துக்கூறி கழகத்தை 100 சதவீத வெற்றி பெற வைப்போம் என்று அம்மாவின் 72 வது பிறந்த நன்னாளில் நாம் அனைவரும் சூளுரை ஏற்க வேண்டும்.

ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும் என்பார்கள் அதே போல் நாம் அனைவரும் ஒத்துழைப்புடன் உழைத்தால் போதும் வெற்றி என்பது நமக்கு உறுதியாகிவிடும். பேரறிஞர் அண்ணா, காமராஜர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா, தற்போதைய முதலமைச்சர் ஆகியோர் ஒரு கருத்துக்கள் கேட்க வேண்டுமென்றால் தொண்டர்களிடம் தான் ஆலோசனை கேட்பார்கள். ஆனால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரசாந்த் கிஷோர் என்பவரிடம் கட்சியை அடமானம் வைத்துள்ளார். சட்டசபை தேர்தலில் சீட் கேட்க ஸ்டாலின் வீட்டில் கூட்டம் வராது .பிரசாந்த் கிஷோர் வீட்டில்தான் கூட்டம் இருக்கும்.

கட்சியை வடநாட்டினரிடம் ஸ்டாலின் அடகு வைத்து விட்டு வெட்கம் இல்லாமல் அறிக்கை விடுகிறார். எனவே திமுகவில் தொண்டர்களுக்கு மரியாதை இல்லை. ஆகவே திமுக தொண்டர்களே அணி அணியாக அஇஅதிமுகவிற்கு வாருங்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் நீங்கள் அயராது பாடுபட்டு வெற்றியை கொடுத்தால் அதன்பின் தி.மு.க. இருக்காது. காணாமல் ேபாய்விடும். ஆகவே எந்த தியாகம் செய்தாலும் எதிர்க்கட்சியை நீங்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பா.நீதிபதி, கே மாணிக்கம், மாவட்ட துணை செயலாளர் ஐயப்பன், மாவட்ட கழக இணை செயலாளர் பஞ்சம்மாள், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்செல்வன், ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன், ராமசாமி; மகாலிங்கம், செல்லப்பாண்டி, ரவிச்சந்திரன், ராஜா, பிச்சைராஜன், நகர செயலாளர் விஜயன், பேரூர் கழக செயலாளர் பாப்பிரெட்டி, கொரியர் கணேசன், நெடுமாறன், பாலசுப்பிரமணி, அழகுராஜா, குமார், வாசிமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.