தற்போதைய செய்திகள்

கால்நடைப்பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்

சேலம்

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வருகின்ற 9-ந்தேதி சேலம் தலைவாசலில் கால்நடை பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவார் என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், தலைவாசல் ஊராட்சி ஒன்றியம் கால்நடை பூங்கா வளாகத்தில் வருகின்ற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். பிறகு விவசாய பெருவிழாவை முதலமைச்சர் துவக்கி வைக்க உள்ளார்.

இந்த விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை.கே ராதாகிருஷ்ணன் நேற்று சேலத்தில் ஆய்வு செய்தார். அப்போது அவருடன் கால்நடை பராமரிப்பு துறை செயலர் கோபால், கால்நடை துறை இயக்குனர் ஞானசேகரன், சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். பின்னர் விழா மேடை மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம், பொதுமக்கள் அமரும் இடம் ஆகியவற்றை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

வருகிற 9-ந்தேதி தெற்கு ஆசியாவிலேயே மிகப்பிரமாண்டமாக அமைய உள்ள கால்நடை பூங்கா மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டி வைக்க உள்ளார். இந்த கால்நடை பூங்கா மேலை நாடுகளில் உள்ளது போன்று அமைய இருக்கிறது. இந்த கால்நடைப் பூங்காவில் கால்நடை ஆராய்ச்சி நிலையம் ஒன்றும் அமைய உள்ளது. அனைத்து நாட்டு இன மாடுகள் மற்றும் பசு, ஆடு செல்லப்பிராணிகள் இங்கு உருவாக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

மீன் வளர்ப்பு, ஆடு வளர்ப்பு போன்ற பல திட்டங்களும் ஏற்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் மற்றும் சிறு குறு விவசாயிகள் வருமானம் அதிகரிக்க பயிற்சியும் இந்த கால்நடை பூங்காவில் வழி வகை செய்யப்பட்டிருக்கிறது. விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக இந்த பூங்கா இருக்கும். 9-ந்தேதி நடக்கும். விழாவில் ஒரு லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். கல்வியாளர்கள் பேராசிரியர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொள்கிறார்கள். இரண்டு நாட்கள் கால்நடை கண்காட்சியும் நடக்க இருக்கிறது.

10-ந்தேதி பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கு கருத்தரங்கு மற்றும் வகுப்புகளும் நடக்க இருக்கிறது. இதில் சுமார் 20,000 பேர் கலந்து கொள்ள உள்ளனர். கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டு விழா நடக்கும் இரண்டு நாட்களும் தமிழகம் முழுவதும் இருந்து மூன்று லட்சத்திற்கு மேற்பட்டோர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். விழாவினையொட்டி 200க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்படுகிறது. விழா நடக்கும் அன்று 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்க உள்ளார்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பேட்டியின் போது மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன் சட்டமன்ற உறுப்பினர்கள் கெங்கவல்லி மருதமுத்து, ஆத்தூர் சின்னதம்பி, சேலம் தெற்கு ஏ.பி.சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.