சிறப்பு செய்திகள்

தஞ்சை பெருவுடையார் கோயிலில் தமிழில் குடமுழுக்கு : சிறப்பான ஏற்பாடுகளை செய்த முதலமைச்சருக்கு மக்கள் பாராட்டு

தஞ்சை

தமிழையும், தமிழர்களையும் உலகறிய செய்த கட்டடக் கலைக்கு சான்றாக விளங்கும் தஞ்சை பெரிய கோயில் மகா குடமுழுக்கு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. தஞ்சை ெபரியகோயில் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட பெருவுடையார் கோயிலில் கடந்த 1997-ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது.

இதையடுத்து 23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் கடந்த 8 மாதங்களாக நடைபெற்றன. கோபுரங்கள் சீரமைப்பு, சாரம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்றன. கடந்த டிசம்பர் 2-ந்தேதி கோயிலில் பாலாலயம் நடைபெற்றது. இந்த முறை யாகசாலை, கோயில் வளாகத்தில் அமைக்காமல் பாதுகாப்பு கருதி அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கில் அமைக்கப்பட்டது. அங்கு 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் யாகசாலை தலங்கள் அமைக்கப்பட்டு அதில் 110 யாககுண்டங்கள், 22 வேள்வி குண்டங்கள் அமைக்கப்பட்டன.

பாதுகாப்பு கருதி யாகசாலை பந்தலில் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குடமுழுக்கு விழாவையொட்டி நந்தி மண்டபம் முன்பு இருந்த பழைய கொடிமரம் அகற்றப்பட்டு சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட 40 அடி உயர தேக்குமரத்திலான புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதேபோல் ராஜகோபுர கலசத்தில் தங்கமுலாம் பூசுவதற்காக கடந்த 5-ந்தேதி தொல்லியல்துறை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கலசம் பாதுகாப்பாக கீழே இறக்கி கொண்டு வரப்பட்டது. விநாயகர், சண்டிகேஸ்வரர், முருகர், வராகி அம்மன் உள்ளிட்ட 7 சன்னதிகளின் கலசங்களும் கழற்றப்பட்டு தங்கமுலாம் பூசப்பட்டன. அப்பணிகள் முடிந்ததையடுத்து கடந்த வாரம் கலசங்கள் அனைத்தும் தொன்மை மாறாமல் பொருத்தப்பட்டன.

கலசங்களுக்கு ஊற்றுவதற்காக கங்கை, காவேரி, யமுனா உள்ளிட்ட பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனிதநீர் யானைகள் மீது ஏற்றப்பட்டு ஊர்வலமாக பெரிய கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 27-ந்தேதி பூர்வாங்க பூஜைகளுடன் விழாக்கள் தொடங்கின. முதல்கால யாகசாலை பூஜை கடந்த 1-ந்தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் காலை வரை யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. மாலையிலும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

குடமுழுக்கு விழாவை நேரில் கண்டு தரிசிக்க நேற்றுமுன்தினம் முதலே தஞ்சை மட்டுமல்லாது வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தஞ்சைக்கு வரத் தொடங்கினர். பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து 175 சிறிய பேருந்துகள், வேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் இலவசமாக குடமுழுக்கு விழா நடைபெறும் இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

காலையில் குடமுழுக்கு விழாவை காண வந்த பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதேபோல் கோயிலில் குவிந்த முக்கிய பிரமுகர்கள், மிக மிக முக்கிய பிரமுகர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வந்து அமர்ந்தனர். காலை 9.30 மணி அளவில் யாகசாலையில் இருந்து புனித நீரை சிவாச்சாரியார்கள் கோபுரத்துக்கு மேலே கொண்டு சென்று தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் ஊற்றப்பட்டது. குடமுழுக்கு விழா நடைபெறும் சமயத்தில் கருடன் கோயிலுக்கு மேலே சுற்றி வலம் வந்தது பக்தர்களை மிகவும் பிரமிக்க வைத்தது. இறைவனே குடமுழுக்கு விழாவை காண வட்டமிட்டதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

தமிழ் எழுத்துக்களான 246 எழுத்துக்களை குறிக்கும் வகையில் இக்கோயிலின் பெரிய கோபுரம் 246 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். குடமுழுக்கு விழாவை கண்டுகளித்த பக்தர்கள் அனைவருக்கும் நேற்று மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆங்காங்கே வசதி படைத்தவர்கள் காலை உணவு, மதிய உணவு, டீ, காபி போன்றவற்றையும் பக்தர்களுக்கு தானமாக வழங்கினார்கள்.

பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு தண்ணீர், மோர், பானக்கரம் போன்றவை வழங்கப்பட்டன. பாதுகாப்புக்காக 5 ஆயிரம் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். 5 லட்சம் மக்களுக்கு மேல் திரண்ட இந்த குடமுழுக்கு விழாவில் ஒரு சிறு அசம்பாவிதம் கூட நடைபெறாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், மற்ற வசதிகளையும் சிறப்பாக செய்து கொடுத்த தமிழக அரசை பக்தர்கள் வெகுவாக பாராட்டினார்கள். குறிப்பாக முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.