தற்போதைய செய்திகள்

மின் உற்பத்தி திட்டங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை – அமைச்சர் பி.தங்கமணி வேண்டுகோள்

நாமக்கல்

புதிய மின் உற்பத்தி திட்டங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள ஏமப்பள்ளியில் 110/22 கிலோ வோல்ட் புதிய துணை மின் நிலைய சோதனை ஓட்ட துவக்க விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி புதிய துணை மின் நிலையத்தில் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் கா.மெகராஜ், கழக பொதுக்குழு உறுப்பினரும், திருச்செங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பொன்.சரஸ்வதி, கொல்லிமலை ஒன்றிய கழக செயலாளரும், சேந்தமங்கலம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான சி.சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு மின்சார வாரியம் பொதுமக்கள், வணிகம், விவசாயம் உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்கும் சீரான மின்சாரம் வழங்கும் வகையில் புதிய துணை மின் நிலையங்களை அமைத்து வருகிறது. இதன்மூலம் விவசாயம் உள்ளிட்ட பணிகளுக்கு குறைந்த மின் அழுத்தம் இல்லாமல் சீரான மின்சாரம் வினியோகம் செய்ய முடியும். வருடத்திற்கு 60 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்ற இலக்கை விஞ்சி கடந்த நான்கு ஆண்டுகளில் 480 துணை மின் நிலையங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் அமைத்துள்ளது.

வருகின்ற கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்படாமல் சீரான மின்சாரம் வழங்கும் வகையில் நாளொன்றுக்கு 17,500 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் தயாராக உள்ளது. வருகின்ற மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை காற்றாலை மின்சாரமும், சூரியஒளி மின்சாரமும் திருப்திகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் நீண்டகாலம் மின் ஒப்பந்தம் மூலம் தேவையான மின்சாரம் கிடைக்கும். இதனால் கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு கிடையாது.

ஏற்கனவே மத்திய மின் தொகுப்பில் இருந்து 4 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு மின்சாரம் வழங்கப்பட்டு வந்ததை 6 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு உயர்த்தி வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 6,000 மெகாவாட் வழங்குவதற்கு மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. பிற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் மின்சார பணிகளுக்கு நிலம் வழங்கும் பொதுமக்களுக்கு அதிக இழப்பீடு வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் உதய் திட்டத்தில் தமிழக அரசு இணைந்துள்ளதால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரமும் வீடுகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரமும் நிறுத்தப்பட மாட்டாது. தொடர்ந்து இலவச மின்சாரம் அவர்களுக்கு வழங்கப்படும்.

தற்போது தமிழகத்தில் 6,800 மெகாவாட் அளவிற்கு புதிய மின்உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டப் பணிகளை விரைந்து முடிப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளது போல ஸ்மார்ட் மீட்டர்கள் அமைப்பதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் பரிசீலனை மேற்கொண்டுள்ளது. மேலும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு – ஈரோடு நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு நிலம் அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பள்ளிபாளையம் பகுதியில் சாலையை ஒட்டி அதிக குடியிருப்புகள் உள்ளதால் அங்கு மேம்பாலம் அமைத்து நான்கு வழிச்சாலைப் பணிகளை செயல்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.