தற்போதைய செய்திகள்

9 மற்றும்10ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு டிக்ஸ்னரி – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

மதுரை

9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு டிக்ஸ்னரி வழங்கப்பட இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் கல்வி மாவட்டத்தில் பயிலக்கூடிய பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பதினோராம் மற்றும் 12ம் வகுப்பு பயிலும் 14 பள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் 3000 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வினய், வருவாய் அலுவலர் செல்வராஜ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.தமிழரசன், மாவட்டக் கழக துணைச் செயலாளர் ஐயப்பன், ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன் ராமசாமி, மகாலிங்கம், நகர செயலாளர் விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது;- 

தமிழுக்கும். தமிழினத்திற்கும் தொடர்ந்து தமிழக முதல்வர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் எண்ணத்தில் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டது பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பள்ளி ஆசிரியர்களும் பெற்றோர்களும் வேண்டுகோள் விடுத்ததை, பள்ளிக்கல்வித்துறை இடத்திலும், தமிழக முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு சென்று அதன் பெயரிலேயே பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்தை ஏற்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்துள்ளார் தமிழக முதல்வர். ஒட்டுமொத்த பள்ளியில் படிக்க கூடிய மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினியையும் விலையில்லா மிதிவண்டி உட்பட 14 வகையான பொருட்களை வழங்குவது இந்தியவிலேயே தமிழகம் மட்டும் தான்.

அம்மா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் தொடர்ந்து நமது தமிழக முதல்வரால் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கிராமங்களில் இருந்து வரக்கூடிய ஏழை மாணவ, மாணவிகள் தங்களது படிப்பை கைவிடா வண்ணம் தொடர்ந்து அவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதற்காக எண்ணற்ற பல திட்டங்களை தமிழக முதல்வர் வழங்கி வருகிறார்.

மாணவச் செல்வங்களின் உள்ளங்களை புரிந்துகொள்ளும் வகையில் அம்மா அரசு செயல்படுகிறது.திருமங்கலம் கல்வி மாவட்டத்தில் பயிலக்கூடிய பதினோராம் வகுப்பு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அம்மா அவர்களின் பிறந்த நாளை குறிக்கும் வண்ணம் அவர்களுடைய ஆங்கில அறிவை பெருக்கும் விதமாக டிக்ஸ்னரி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்க கூடிய மாணவ, மாணவிகளுக்கு டிக்சனரி வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

அதைத்தொடர்ந்து பி.கே.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மரம் வளர்க்கும் எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் வண்ணமும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கமாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மரக்கன்றை நட்டார்.