தற்போதைய செய்திகள்

சாலை விபத்து உயிரிழப்புகள் தமிழகத்தில் 53 சதவீதம் குறைப்பு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

கரூர்

தமிழக அரசு எடுத்த சாலை பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளின் காரணமாகவும் உச்சநீதிமன்றம் கூறிய 50 சதவீதத்தையும் தாண்டி 53 சதவீத உயிரிழப்புகளை தடுத்துள்ளோம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயாபஸ்கர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட வேலைவாய்ப்புத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து, தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் தலைமையில் துவக்கி வைத்து, தேர்வான நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது:-

போக்குவரத்துத்துறையில் சாலை பாதுகாப்பு என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது. 2000ம் ஆண்டு 10,000 வாகனங்களுக்கு 19 பேர் உயிரழந்தார்கள் என்ற நிலை இருந்தது. தற்போது 10,000 வாகனங்களுக்கு உயிரிழப்பு 3 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 53 சதவீதம் அளவிற்கு விபத்துக்களையும், உயிரிழப்புக்களையும் தமிழக அரசு குறைந்திருக்கின்றது.

2016ம் ஆண்டு கணக்கெடுக்கப்பட்டதில் இருந்து 2020க்குள் இந்தியாவில் விபத்துக்களையும், உயிரிழப்புகளையும் 50 சதவீதமாக குறைக்கின்ற அடிப்படையில், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் எற்படுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தார்கள். அம்மா அவர்களின் சீரிய திட்டங்களாலும், சாலை பாதுகாப்பு நிதியை ரூ.20 கோடியிலிருந்து ரூ.65 கோடியாக உயர்த்தியதன் காரணமாகவும், அதனை தொடர்ந்து தமிழக அரசு எடுத்த சாலை பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளின் காரணமாகவும் உச்சநீதிமன்றம் கூறிய 50 சதவீதத்தையும் தாண்டி 53 சதவீத உயிரிழப்புகளை தடுத்துள்ளோம்.

இந்திய அளவில் சாலைபாதுகாப்பினை முறையாக கடைபிடித்து, சாலை விதிகளை பின்பற்றி சாலை விபத்துக்களை அதிக அளவில் குறைத்ததற்காக முதல் பரிசிற்கான விருதை தமிழகம் பெற்றுள்ளது. மாணவர்களிடத்திலும் சாலை பாதுகாப்பு குறித்த புரிதலை ஏற்படுத்த பள்ளி பாடத்திட்டத்தில் சாலை விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பாக பாடங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இளைஞர்களாகிய நீங்கள் வாகனம் ஓட்டும்போது, ஹெல்மட் அணிவதும், சீட்பெல்ட் அணிவதும் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து, அதை பின்பற்ற வேண்டும். மற்றவர்களுக்கும் எடுத்துக்கூற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

முன்னதாக அமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.220 லட்சம் மதிப்பில் புதிய கட்டப்பட உள்ள மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் மற்றும் விவி பேட் இயந்திரங்களையும் வைப்பதற்காக கிடங்கி அமைக்கும் பணியினை பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார். இவ்விழாவில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ம.கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் வ.சந்தியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.