தற்போதைய செய்திகள்

அம்மா அரசின் சீரிய செயல்பாட்டினால் கல்வியில் திருவண்ணாமலை முன்னேற்றம் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பெருமிதம்

திருவண்ணாமலை

அம்மா அரசின் சீரிய செயல்பாட்டினால் திருவண்ணாமலை மாவட்டம் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருவதாக அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பெருமிதத்துடன் கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை நகராட்சி மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு.கந்தசாமி தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்து கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் 2019-2020-ம் கல்வி ஆண்டில் 21,981 மாணவர்களுக்கு ரூ.7.44 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் சா.மார்ஸ், மாவட்ட கல்வி அலுவலர் ச.அருள்செல்வம், முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.வனரோஜா, அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது:-

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கவும், இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை ஆக்கிடவும் தொலைநோக்கு பார்வையில் விசன்-2023 என்ற திட்டத்தினை நனவாக்கிட அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் மடிகணினி வழங்கும் திட்டம். வறுமையின் காரணமாகவும், பொருளாதார நெருக்கடி காரணமாகவும் மாணவர்களின் உயர் கல்வி தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக அம்மாவின் அரசு விலையில்லா பாடநூல் தொடங்கி மடிகணினி வரை 14 நலத் திட்டங்களை தீட்டி மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2011-2012-ம் கல்வி ஆண்டு முதல் 2018-2019-ம் கல்வி ஆண்டு வரை 11-ம் வகுப்பு பயின்ற ஒரு லட்சம் மாணவர்களுக்கு 52.9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, 2019-2020-ம் கல்வி ஆண்டில் 21,981 மாணவர்களுக்கு 7.44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.

அம்மா அவர்களின் ஆசியோடும், முதலமைச்சர் உத்தரவின் பேரிலும் சீரும் சிறப்போடும் நடைபெற்று வரும் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளால் திருவண்ணாமலை மாவட்டம் கல்வியில் ஏறுமுகத்தை பெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 28-வது இடமும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 24-வது இடமும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 20-வது இடமும் பெற்று முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்த கலைத்திருவிழா, நீட் தேர்விற்கு 412 ஆன்லைன் கல்வி மையங்களில் பயிற்சி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவர்களின் அறிவுத்திறன் மேம்பட 20 பள்ளிகளில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அட்டல் டிங்கரிங் ஆய்வகம், ஆசிரியர்களை கவுரவிக்கும் கனவு ஆசிரியர் விருது, பள்ளிகளை பெருமைப்படுத்த புதுமைப்பள்ளி விருது, மாணவர்களை ஊக்குவிக்க காமராஜர் விருது, அரசு ஊழியர்களை கவுரவிக்க முதலமைச்சர் விருது, கூடுதலாக 52 மாவட்டக் கல்வி அலுவலகத்தை உருவாக்கி, கூடுதல் பணியிடங்கள் வழங்கி பள்ளிக் கல்வித்துறை பீடுநடை போட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.

இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை நகராட்சி மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 698 மாணவிகளுக்கு ரூ.23.6 லட்சம் மதிப்பிலும், சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 181 மாணவர்கள், 119 மாணவிகள் என மொத்தம் 300 மாணவர்களுக்கு ரூ.10.1 லட்சம் மதிப்பிலும், டேனிஷ் மிசன் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 195 மாணவர்கள், 64 மாணவிகள் என மொத்தம் 259 மாணவர்களுக்கு ரூ.8.7 லட்சம் மதிப்பிலும், வி.டி.எஸ்.ஜெயின் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 439 மாணவர்கள், 210 மாணவிகள் என மொத்தம் 649 மாணவர்களுக்கு ரூ.21.9 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 1906 மாணவ, மாணவிகளுக்கு ரூ.64.3 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.