சிறப்பு செய்திகள்

பசுமை பண்ணைகள், ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்

சென்னை

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தி நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்ததாவது:-

வெங்காய விளைச்சல் அதிகம் உள்ள பகுதிகளான மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடகாவில் பெய்த அதிக மழையின் காரணமாக வெங்காயத்தின் விலை உயர்ந்து காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, நுகர்வோருக்கு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்திட, முதலமைச்சரின் உத்தரவிட்டதன் அடிப்படையில், உணவுத்துறை அமைச்சர், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் துறை உயர் அலுவலர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டங்கள் 4.11.2019 மற்றும் 6.11.2019 ஆகிய தினங்களில் நடைபெற்று, கூட்டுறவு மற்றும் உணவுத்துறையின் மூலம் குறைந்த விலைக்கு தரமான வெங்காயம் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கிலோ ரூ.40-க்கு 8.11.2019 முதல் விற்பனை செய்யப்பட்டது.

மேலும், தமிழக அரசு வெங்காய விலையினை கட்டுப்படுத்த, இறக்குமதி செய்யப்பட்ட 1000 மெ.டன் எகிப்து வெங்காயத்தினை தமிழகத்திற்கு வழங்க மத்திய அரசைக் கேட்டுக் கொண்டதன் பேரில் டிசம்பர் மூன்றாம் வாரத்தில் தமிழகம் வந்தடையும். அவ்வாறு பெறப்படும் வெங்காயம், தமிழகத்தில் செயல்படும் 79 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் செயல்படும் 1200 நியாயவிலைக் கடைகளில் முதற்கட்டமாக விற்பனை செய்யப்படும். எகிப்திலிருந்து பெறப்படும் வெங்காயம் தரமானதாகவும், சமையலுக்கு ஏற்றதாகவும் உள்ளதால் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. பொதுமக்களுக்கு வெளிச்சந்தையை விட இவ்வெங்காயம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும்.

தமிழகத்தில், தற்போது 60000 ஏக்கர் நிலத்தில் வெங்காயம் சாகுபடி நடைபெறுகிறது. இந்த ஆண்டு மேலும் 50000 ஏக்கர் நிலத்தில் புதுக்கோட்டை, தேனி, வேலூர், ஈரோடு, சேலம், சிவகங்ககை, இராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற பல மாவட்டங்களில் வெங்காயம் சாகுபடி செய்ய நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் வெங்காய சாகுபடி பரப்பு அதிகரித்து, விளைச்சல் பெருகி தமிழகம் தன்னிறைவு அடையும்.

வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்திட புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2013-14 முதல் அதிகளவில் வட்டியில்லாக் காய்கறி பயிர் கடன் வழங்க ஆணையிட்டார்கள். அதன்படி 2013 முதல் 30.11.2019 வரை 3,87,570 நபர்களுக்கு ரூ.3,089.83 கோடி வட்டியில்லா காய்கறி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது இதில், நடப்பாண்டில் மட்டும், 30.11.2019 வரை 1,05,044 விவசாயிகளுக்கு ரூ.920.14 கோடி காய்கறி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்த வரை 11.12.2019 முதல் 29 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 500 நியாய விலைக் கடைகளில் வெளிச்சந்தை விலையைவிட குறைவாக விலையில் ரூ.50-க்கு வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 11.12.2019 அன்று 21.05 மெ.டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டது. 8.11.2019 முதல் 11.12.2019 வரை 116 மெ.டன் அளவிலான வெங்காயம் ரூ.48.95 லட்சம் மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கு.கோவிந்தராஜ், ஆலோசகர், இரா.கார்த்திகேயன், கூடுதல் பதிவாளர்கள், முனைவர், க.ராஜேந்திரன், ம.அந்தோனிசாமி ஜான் பீட்டர், ஆர்.ஜி.சக்திசரவணன், பா.பாலமுருகன், இரா.பிருந்தா, கோ.க.மாதவன், வெ.லட்சுமி, சு.செந்தமிழ்ச்செல்வி, மு.முருகன் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.