சிறப்பு செய்திகள்

பட்டாணி இறக்குமதியை எளிதாக்க நடவடிக்கை – மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் பட்டாணி கொள்முதல் குறைந்து விட்டதால் அரவை ஆலைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. பட்டாணி ஒரு பாரம்பரியமிக்க உணவு வகையாகும். இந்தியாவில் 5.40 லட்சம் ஹெக்டேர் விளை நிலங்களில் பட்டாணி வகைகள் பயிரிடப்படுகின்றன. இதன் மூலம் 54.22 லட்சம் மெட்ரிக் டன் பட்டாணி ஆண்டுதோறும் கொள்முதல் செய்யப்படுகிறது. பட்டாணிபெரும்பாலும் குளிர்பிரதேசங்களில் தான் நன்றாக விளையும். தமிழ்நாட்டில் குறைந்த அளவு பட்டாணி தான் உற்பத்தி செய்யப்படுகிறது. பச்சை பட்டாணி 120 ஹெக்டேரில் பயிரிடப்பட்டு 1960 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.

மஞ்சள் நிற பட்டாணி பெரும்பாலும் வட மாநிலங்கள், மத்திய மாநில பகுதிகள், வடகிழக்கு மாநிலங்களில் முக்கியமாக பயிரிடப்படுகிறது. உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப், அசாம் போன்ற மாநிலங்களில் அவற்றை போதுமான அளவு கொள்முதல் செய்து விடுகின்றன. தமிழ்நாட்டு மக்கள் பெரிதும் விரும்பி சாப்பிடும் பட்டாணிக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா போன்ற மாநிலங்களின் தேவை அதிகமாக உள்ளது.

பட்டாணி விளைச்சல் மற்றும் வரத்து குறைவாக இருப்பதால் இங்குள்ள மாவு அரவை ஆலைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. மாவு அரவை ஆலைகளை நம்பி சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 65 ஆயிரம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் இந்த பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். பட்டாணி வரத்து குறைவானதால் அவர்களது வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டுக்கு 2 லட்சம் மெட்ரிக் டன் பட்டாணி தேவைப்படுகிறது. ஆனால் 10 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் காரணமாக பட்டாணியின் விலை அதிகரிக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கிலோவுக்கு 60 ரூபாய் வரை பொதுமக்கள் கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதனால் ஆஸ்திரேலியா, கனடா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து தமிழகத்துக்கு தேவையான பட்டாணியை இறக்குமதி செய்ய தூத்துக்குடி துறைமுகம் மூலம் மேற்கண்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பட்டாணியின் விலை குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமல்லாது தமிழ்நாட்டில் உள்ள மாவு ஆலைகள் தொடர்ந்து செயல்படுவதற்கும் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

இதற்கிடையில் கடந்த 18.12.2019 அன்று மத்திய வர்த்தக டைரக்டர் ஜெனரல் விடுத்துள்ள அறிக்கையில் வெளிநாடுகளில் இருந்து 1.50 லட்சம் மெட்ரிக் டன் பட்டாணி தான் இறக்குமதி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற கட்டுப்பாடு காரணமாக பட்டாணியின் விலை நேரடியாகவும், மறைமுகமாகவும் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள மாவு அரவை ஆலைகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கும். இதனால் இத்தொழிலை நம்பி வாழும் மக்கள், தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த தொழிலையே நம்பியிருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கும். எனவே மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும். அதேநேரத்தில் தமிழகத்திற்கு பட்டாணி தேவை அதிகமாக இருப்பதால் போதுமான அளவு இறக்குமதி செய்வதற்கும் மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

எனவே மத்திய அரசு மஞ்சள் பட்டாணி, பச்சை பட்டாணி, மற்ற வகை பட்டாணி ஆகிய அனைத்து வகை பட்டாணி பொருட்களையும் வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்தின் மூலம் இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் தமிழகத்தின் அருகில் உள்ள மற்ற மாநிலங்களும் பயனடைவதற்கு வாய்ப்பாக இருக்கும். எனவே பட்டாணி இறக்குமதி தொடர்பான மத்திய அரசின் கட்டுப்பாட்டைதளர்த்தி வேண்டிய அளவு பட்டாணி இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு உடனடியாக ஆவன செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.