தற்போதைய செய்திகள்

தமிழக மக்களிடம் பிளவு ஏற்படுத்தவே கையெழுத்து இயக்கம் நடத்துகிறது தி.மு.க – அமைச்சர் க.பாண்டியராஜன் குற்றச்சாட்டு

திருவள்ளூர்

தமிழக மக்களிடையே பிளவு ஏற்படுத்தவே தி.மு.க. கையெழுத்து இயக்கம் நடத்துகிறது என்று அமைச்சர் க.பாண்டியராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2019-2020ன் கீழ் ஆவடி சட்டமன்ற தொகுதி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சேக்காடு பகுதியில் 72 தெருக்களில் 33.5 கிலோ மீட்டர் நீளம் தேர்வு செய்து தார்சாலை சிமெண்ட் சாலை மற்றும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை மேற்கொள்ள சுமார் ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணி உத்தரவு வழங்கப்பட்டது.

இந்த பணிகளை அமைச்சர் க.பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். அதேபோல் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஆவடி பகுதியில் அமையப்பெற்றுள்ள அம்மா திருமண மண்டபத்தையும் அமைச்சர் க.பாண்டியராஜன் ஆய்வு செய்தார்.

பின்னர் க.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் ஒரு பிரிவினரை மட்டுமே வைத்து பதற்றத்தை உருவாக்கும் இயக்கம் தான் தி.மு.க நடத்தும் கையெழுத்து இயக்கம்.ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் மக்களை பிளவுபடுத்துகின்றனர். 1 கோடி கையெழுத்து பெற நடத்தும் இந்த இயக்கத்தை மத்திய அரசு ஏன் தடை செய்யாமல் பார்த்து கொண்டிருக்கிறது என்பது புரியவில்லை.

தற்போது போராட்டத்தில் பங்குபெறும் மாணவர்களைப் பற்றி ரஜினி பேசியதை வரவேற்கிறேன். அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரஜினி தமிழக இளைஞர்களுக்கு தந்தையாகவும் அண்ணனாகவும் கருத்து கூறியதை வரவேற்கிறேன். மேலும் விஜய், வீட்டில் நடக்கும் வரித்துறை சோதனையில் சாதாரண நடைமுறை தான். குடியுரிமை பாதுகாப்பு சட்டத்தால் சிறுபான்மை மக்களுக்கும் சரி, பெரும்பான்மை மக்களுக்கும் சரி, எந்த விதமான ஆபத்தும் வராது. அவ்வாறு வந்தால் சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக கழக அரசு திகழும். அதே கருத்தை தான் ரஜினி இன்று கூறுகிறார்.

இவ்வாறு அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்

இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் ஆர்.சி.தீனதயாளன் உட்பட பலர் பங்கேற்றனர்.