தற்போதைய செய்திகள்

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நற்குண பேராளர் விருது

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நற்குண பேராளர் விருதும், அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரனுக்கு திருப்பணி செம்மல் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

திருண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை செங்கம் சாலை கிரிவலப்பாதையில் கோவை பேரூர் ஆதீனம், சாந்தலிங்கம் நினைவு அறக்கட்டளை மூலமாக புதியதாக அமைக்கப்பட்டுள்ள அக்னி தீர்த்தம் தோரணவாயில், புனரமைக்கப்பட்டுள்ள அக்னி தீர்த்தம் மற்றும் பக்தர்கள் புனித நீராடுதல் ஆகிய பணிகள் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று திறந்து வைத்தார்.

முன்னதாக அமைச்சர்களுக்கு கோவை பேரூர் ஆதீனம், சாந்தலிங்கம் நினைவு அறக்கட்டளை சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோவை பேரூர் ஆதீனம், சாந்தலிங்கம் நினைவு அறக்கட்டளை சார்பாக சிறப்பான சேவை செய்தமைக்காக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ‘நற்குண பேராளர்’ விருதும், அருள்மிகு அண்ணாமலையார் விருதும், இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். இராமச்சந்திரனுக்கு திருப்பணிச் செம்மல்’ விருதும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையாளர் மு.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் க.சு.கந்தசாமி, செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன், திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பெருமாள்நகர் கே.ராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா, அருணாசலேசுவரர் திருக்கோயில் இணை ஆணையாளர் இரா.ஞானசேகரன், முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்.வனரோஜா, மரகதம் குமரவேல், அரசு அலுவலர்கள், அறக்கட்டளை அறங்காவலர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.