சிறப்பு செய்திகள்

கடலூரில் ரூ.50 ஆயிரம் கோடியில் பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை : அமெரிக்க நிறுவன அதிகாரிகளுடன்முதல்வர் ஆலோசனை

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா, லண்டன், துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குமாறும், முதலீடு செய்யுமாறும் அழைப்பு விடுத்தார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பால்பண்ணையை பார்வையிட்டபோது அதேபோன்று தமிழகத்திலும் பால் பண்ணை மட்டுமின்றி கால்நடை பூங்கா அமைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாகத்தான் சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசலில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அமைய இருக்கிறது. இதற்காக நாளை காலை முதலமைச்சர் அடிக்கல் நாட்ட இருக்கிறார்.

லண்டனில் கிங்ஸ் மருத்துவமனையை பார்வையிட்டபோது அதன் கிளையை தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதன் விளைவாக வெகு விரைவில் தமிழ்நாட்டில் கிங்ஸ் மருத்துவமனையின் கிளை உருவாக இருக்கிறது.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்துடன் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து கடலூரில் மிகப் பிரம்மாண்டமான பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலை ரூ.50 ஆயிரம் கோடி முதலீட்டில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான பூர்வாங்க ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் புரனேந்து சாட்டர்ஜி மற்றும் நிர்வாக துணைத்தலைவர் ராபின் முகோபத்யாய் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் க.சண்முகம், தொழில்துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.