சிறப்பு செய்திகள்

தீயசக்திகளின் தூண்டுதலால் இளைஞர்கள் தவறான பாதையில் சென்று விடக்கூடாது : துணை முதலமைச்சர் வேண்டுகோள்

சென்னை:-

தீய சக்திகளின் தூண்டுதலுக்கு ஆளாகி இளைஞர்கள் தவறான பாதைக்கு சென்று விடக்கூடாது, விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப ஈடுகொடுத்து வாழ்வில் உயர்ந்திட வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை அடையாறு இளைஞர் விடுதி அரங்கத்தில் நடைபெற்ற நேரு யுவகேந்திரா தேசிய பழங்குடி இளைஞர் பரிமாற்றத் திட்ட முகாம் நிறைவு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆற்றிய உரை வருமாறு:-

ஒரு நாட்டின் வளர்ச்சிக்குக் காரணமாயிருக்கும் உந்து சக்திகளில் முதன்மையாகத் திகழ்வது அந்த நாட்டின் இளைஞர் சக்தியே ஆகும். ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் புறக்கணிக்க முடியாததும், தவிர்க்க இயலாததுமாக விளங்குவதும் இளைஞர் சக்தி தான்.

உலகில் உள்ள சில நாடுகள் தான் மக்கள் தொகையில் கணிசமான அளவு இளைஞர்களைப் பெற்றுள்ளது. அதில் மிகவும் குறிப்பிடத்தக்க நாடாக நமது இந்தியத் திருநாடு விளங்குகிறது. இந்தியாவின் மக்கள் தொகையில் ஏறத்தாழ
50 சதவீதத்திற்கும் மேலாக 25 வயதிற்குட்பட்ட, உங்களைப் போன்ற இளைஞர்கள் தான் நிரம்பி உள்ளனர்.

வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் உலக அரங்கில் உயர்ந்ததோர் இடத்தைப் பெற்று விளங்கும் இந்தியத் திருநாட்டின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பது, அரசின் வளர்ச்சித் திட்டங்களை இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்வதும், வளர்ச்சி சார்ந்த நிகழ்வுகளில் இளைஞர்கள் தங்களுடைய உறுதி மிக்க பங்களிப்பை அளிப்பதுமே ஆகும்.

அதனால் தான், “இளைஞர்கள் முன்னேற கனவு காண வேண்டும், கண்ட கனவை நனவாக்க கடும் உழைப்பை நல்க வேண்டும். அந்த உழைப்பால் இந்தியத் திருநாட்டை உலகின் முன்னணியில் நிறுத்த வேண்டும்” என்று நமது முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாம், தான் சந்தித்த, பேசிய, ஆலோசனை மேற்கொண்ட இளைஞர்கள் மத்தியில் அடிக்கடி கூறி வந்திருக்கிறார்.

புதிய சிந்தனைகள், புத்தாக்க எண்ணங்கள், புதுமை படைக்கும் திறன்கள், எந்நாட்டவர்க்கும் சளைக்காத திறமைகள்,
அயராத உழைப்பு, தளராத சிந்தனை, தயங்கிடாத முயற்சி, தடங்கல் இல்லாத செயல்பாடு, நவீன உத்திகளை உருவாக்கும் அறிவாற்றல், அவற்றை திறமுடன் கையாளும் செயலாற்றல், வளர்ச்சி ஒன்றே இலக்கெனக் கொண்டுவாய்ப்புகளைத் தேடிப் பிடிக்கின்ற மனவலிமை, என எண்ணற்ற பரிமாணங்கள் கொண்டவர்களாக இன்றைய இளைஞர்கள் திகழ்கிறார்கள். “இளைஞர்கள்தான் நாட்டின் எதிர்காலம். அவர்களின் கரங்களில் தான் நாடு உள்ளது.”என 100 ஆண்டுகளுக்கு முன்பே இளைஞர்களின் சக்தியை உலகுக்கு உணர்த்தினார் சுவாமி விவேகானந்தர். வீரத் துறவி விவேகானந்தரின் இந்த வைர வரிகளுக்கு உயிர் கொடுப்பவர்களாக இன்றைய இளைஞர்கள் திகழ்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக, நமது நாட்டின் பழங்குடி இளைஞர்களின் திறன் மிகவும் அளப்பரியதாகும். காட்டாற்று வெள்ளம் போல் கரை புரண்டு ஓடிவரும் அவர்களது சிந்தனைகளை முறைப்படுத்தி, அவர்களது திறமைகளை வகைப்படுத்தி, நாட்டுக்குப் பயன்படுத்த வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை ஆகும்.

அதன் அடிப்படையில் தான், சத்தீஸ்கர் மாநிலத்தின் தாம்தாரி மாவட்டத்தில் பாய்கின்ற மகாநதியில், திரண்டுவரும் தண்ணீரைத் தேக்கி வைத்திருக்கும் கேங்கிரல் அணைக்கட்டு போல, சத்தீஸ்கர் மாநிலத்தில் வாழும் பழங்குடி இன இளைஞர்களின் வலிமையையும் திறமைகளையும் முறையாகத் தேக்கி, அவற்றை மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துகின்ற நோக்கில், மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து, தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில நேரு யுவகேந்திரா சங்கேதன் அமைப்பு, இந்த பழங்குடியின இளைஞர் பரிமாற்ற முகாமை ஏற்பாடு செய்துள்ளது.

பழங்குடியின மக்கள், நாட்டில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ளவும், ஏனைய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை நேரில் கண்டு மகிழவும், மற்ற மாநில மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டு அவர்களது கலாச்சாரங்களை, பழக்க வழக்கங்களை புரிந்து கொள்ளவும், தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றை உணர்ந்து அவற்றை வளர்த்துக் கொள்ளவும், இந்த பழங்குடியின இளைஞர் பரிமாற்ற முகாம் நிகழ்ச்சி, பேருதவி புரியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

உலக அளவில், பல தலைவர்களின் வெற்றிக்கு இளைஞர்களின் ஆதரவே காரணமாக அமைந்திருக்கிறது.தமிழ்நாட்டின் இணையற்ற முதலமைச்சர்களாகத் திகழ்ந்த மக்கள் திலகம் எம்ஜிஆரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும், தேர்தல்களில் தொடர்ந்து மகத்தான வெற்றி பெற்றதற்கு, காரணம் அவர்கள் மீது இளைஞர்கள் வைத்திருந்த நம்பிக்கையும், அவர்கள் அளித்த பேராதரவுமே ஆகும்.

உலகம் எங்கும் ஜனநாயகம் சிறந்தோங்கி வளர்வதற்கு இளைஞர்கள்தான் தோள் கொடுத்திருக்கிறார்கள். ஜனநாயத்தின் காவலர்களாக அவர்கள் விளங்கி இருக்கிறார்கள். இன்றும் விளங்கி கொண்டிருக்கிறார்கள். இளைஞர்களைப் புறந்தள்ளும் எந்த ஒரு நாடும் முன்னேற்றம் கண்டதாகவோ, இளைஞர் சக்தியை புறக்கணிக்கும் எந்த ஒரு சமுதாயமும் எழுச்சி பெற்றதாகவோ, இதுவரை சரித்திரமே கிடையாது.

“கொல் அல்லது கொல்லப்படுவாய்” என்பதே ஆதி மனிதனை இயக்கும் விதியாக இருந்தது. ஆனால், இன்றோ, “வெல் அல்லது வெல்லப்படுவாய்” என்பதுதான் புதிய தலைமுறையை இயக்கும் விதிமுறையாக உள்ளது என்பதை உணர்ந்து, வெற்றி பெறுவதற்கு உரிய வழிமுறைகளை அறிந்து, கடுமையாக உழைத்திட வேண்டும் என்று இளைஞர்களாகிய உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

நாடு முழுவதும் 23 மாநிலங்களில் ஐந்து கோடி பேருக்கும் மேலாக உள்ள பழங்குடியின மக்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கு பாரதப் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு, பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. பழங்குடியின மக்களின் பாதுகாப்பு அரணாக, விளங்கி பழங்குடியின இளைஞர் மற்றும் இளம்பெண்களை சமுதாயத்தில் முன்னேற்றம் அடையச் செய்ய மத்திய அரசு சிறப்புடன் செயலாற்றி வருகிறது என்பதை நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

மத்திய அரசின் திட்டங்களையெல்லாம் பழங்குடியின இளைஞர்கள் தக்க முறையில் பயன்படுத்திக்கொண்டு, உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும். உங்களது குடும்ப உறுப்பினர்களையும், உறவினர்களையும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மத்திய, மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். தீயசக்திகளின் தூண்டுதல்களுக்கு ஆளாகி, தவறான பாதையில் சென்றுவிடக்கூடாது என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இனிமையாக பேசுவதற்கும், பண்பாக பழகுவதற்கும் பெயர் வாய்ந்த பைகா, பாஸ்டர், கோர்பா, மரியா உட்பட பல்வேறு பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்ற சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து வருகை தந்திருக்கும், பீஜப்பூர், சுக்மா, பஸ்தார், மற்றும் தந்தேவாடா ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த, எனது அன்பிற்குரிய பழங்குடியின இளைஞர்களே, இளம்பெண்களே,‘ ஒரே ஒரு கருத்தை மட்டும் உங்களிடம் எடுத்துக் கூற விரும்புகிறேன்.

பழங்குடியினர் என்றால், கல்வி அறியாமல் காடுகளிலும், மேடுகளிலும், மரங்களிலும் மலைகளிலும் அலைந்து திரிந்தவர்கள் என்று எவராவது அலட்சியமாக சொன்னால், அவர்களது பேச்சில் கொஞ்சமும் அக்கறை செலுத்தாதீர்கள். அவர்கள் உரைக்கும் சொற்கள் சற்றும் பிரயோஜனம் இல்லாத வெற்று வார்த்தைகள்தான் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.பழங்குடியின முன்னோர்களின், உங்களது மூதாதையர்களின், தனித் திறமைகளை பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.

அடர்ந்த காடுகளிலும் உயர்ந்த மலைகளிலும் விளைந்து மணக்கும் மூலிகைகளின் மருத்துவ குணங்களை அறிந்தவர்கள், உடல் நோய்களைத் தீர்க்கும் அனுபவ வைத்தியத்தில் கை தேர்ந்தவர்கள் என்பதையும், காட்டுக் கொடிகளையும், மூங்கில்களையும் கொண்டு, காண்போர் வியக்கும் வண்ணம் கைவினைப் பொருட்களை கலைநயத்துடன் உருவாக்குபவர்கள் என்பதையும், நடந்து சென்ற காலடித் தடங்களையும், வீசுகின்ற வாசனையையும் வைத்தே விலங்குகளின் மறைவிடங்களை கண்டறியும் நுட்பம் அறிந்த வல்லுநர்கள் நீங்கள் என்பதையும், நெடிதுயர்ந்த மலைகளிலும், உயர்ந்தோங்கிய மரங்களிலும் சடசடவென ஏறித் தேன் எடுப்பதில் சமர்த்தர்கள் என்பதையும், காட்டாறுகளிலும் கடலிலும் நீரோடி மீன் பிடிப்பதில் நிபுணர்கள் என்பதையும், மலை கிராமங்களையும், அங்கு வாழுகின்ற மக்களையும், கட்டுப்பாடு குலையாமல் காக்கின்ற தலைமைப் பண்பு மிக்கவர்கள் என்பதையும் என எண்ணிலாத் திறமைகளைத் தன்னகத்தே கொண்டவர்கள் பழங்குடியின மக்கள்.

உங்களது முன்னோர்களின் திறமைகளை எல்லாம் மனதில் கொண்டு, அவர்களை வணங்கி, அவர்களது வழியில் நிற்பதோடு, இன்றைய சமுதாய மாறுதல்களுக்கும் விஞ்ஞான வளர்ச்சிக்கும் ஏற்ப ஈடு கொடுத்து, உங்களது வாழ்வில் உயர்ந்திட வேண்டும் என்று பழங்குடியின இளைஞர்களாகிய உங்கள் அனைவரையும் வாழ்த்தி எனது உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.