தற்போதைய செய்திகள்

நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் நியூமோகாக்கல் தடுப்பூசி திட்டம் அறிமுகம் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பெருமிதம்…

கோவை:-

நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் நியூமோகாக்கல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

கோயம்புத்தூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. ரூ.6.50 கோடி மதிப்பிலான இரண்டு கேத் லேப் கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் 2750 நபர்களுக்கு ஏஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் 75 நபர்களுக்கு ஸ்டண்ட் சிகிச்சை மேற்கொள்ளப் பட்டுள்ளது. 15 நபர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது போன்ற சாதனைகளை அரசு மருத்துவமனை செய்து வருகின்றது.

1.5 கிலோ எடைக்கு குறைவாக இருக்கக்கூடிய பச்சிளம் குழந்தைகளுக்கு இந்தியாவிலேயே முதன் முறையாக புதிய முயற்சியாக நியூமோகாக்கல் தடுப்பூசி திட்டத்தை தமிழ்நாட்டில் முதல்முறையாக ரூ.4 கோடி செலவில் தொடங்கப் பட்டுள்ளது. ஒரு தடுப்பூசியின் விலை ரூ.4,000 ஆகும். 1.5 கிலோ எடைக்கு குறைவாக இருக்கக்கூடிய ஒரு குழந்தைக்கு நான்கு முறை இந்த தடுப்பூசி ரூ.16,000- மதிப்பிலான இத்தடுப்பூசி வழங்கப்படுகிறது.

ஆனால் இத்தடுப்பூசி எந்த வித கட்டணமும் இல்லாமல் அரசு மருத்துவமனையில் வழங்கப்படுகிறது. இத்திட்டமானது இன்று தொடங்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து ரத்தநாள அறுவை சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ரத்தநாள அறுவை சிகிச்சை ஆறு மணி நேரத்திற்குள் செயல்படுத்தப்படவில்லை எனில் இறக்கும் நிலை அல்லது கை கால்கள் இழந்து போகும் சூழ்நிலை ஏற்படும். இந்நிலையில் எவ்வித கட்டணமும் இல்லாமல் ரத்தநாள அறுவை சிகிச்சை முறை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உரிய சிகிச்சைகளை மேற்கொண்டு உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பேசினார்.