திருவண்ணாமலை

586 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் – வீ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ வழங்கினார்…

திருவண்ணாமலை:-

கீழ்வன்னியூர் பகுதியில் 586 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வீ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்வன்னியனூர் பகுதியில் தமிழக அரசின் பொது சுகாதார துறை சார்பில் இலவச மருத்துவ முகாம் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டபிரபு தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் வீ.பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து கலசப்பாக்கம் வட்டாரத்தைச் சேர்ந்த 586 கர்ப்பிணி பெண்களுக்கு தாய்சேய் நல ஊட்டச்சத்து அடங்கிய பெட்டகங்களை வழங்கினார்.

பின்னர் வீ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ பேசுகையில், அம்மாவின் வழியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அரசு சுகாதார துறைக்கு அதிக நிதிகளை ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் இந்தியாவிலேயே அதிக மருத்துவ வசதி கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்ந்துகொண்டிருக்கிறது. மேலும் அம்மாவின் அரசு கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை, கர்ப்பிணி பெண்களுக்கு ரத்தசோகை போக்கும் ஊட்டச்சத்துகள் அடங்கி பெட்டகம், ஒரு பெட்டகம் 2 ஆயிரம் மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது.

இந்த வட்டாரத்தில் 586 கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையை நாடி சென்ற பொதுமக்களுக்கு, அம்மாவின் அரசு இன்று மக்களை நாடி மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது என்றார். அதனைத்தொடர்ந்து ஜல்சக்தி அபியான் திட்டத்தை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

இம்முகாமில் இ.சி.ஜி, ஸ்கேன், இருதய நோய், மகப்பேறு, மருத்துவம், பால்வினை நோய், எலும்பு மூட்டு புற்றுநோய், பல் காதுமூக்கு, தொண்டை, இரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இம்முகாமில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இம்முகாமில் பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஜெயராமன், துணை தலைவர் கருணாமூர்த்தி, மருத்துவர், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.