தற்போதைய செய்திகள்

மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுக்கு ரூ.5 கோடி செலவு – அமைச்சர் பி.தங்கமணி பேட்டி

நாமக்கல்

மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் ரூ.5 கோடி செலவு செய்யப்படுகிறது என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

நாமக்கல் அடுத்த வசந்தபுரத்தில் அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு பொதுமக்களின் தேவைகளை அறிந்து, நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவற்றில் குடிநீர், கல்வி, விவசாயம், சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம், சாலைகள், தொழில்கள், அரசு கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் படிப்படியாக மதுக்கடைகள் குறைக்கப்பட்டு வருகின்றன. பூரண மதுவிலக்கு மட்டுமே அரசின் கொள்கை ஆகும், இதுவரை ஆயிரம் மதுக்கடைகள் குறைக்கப்பட்டு உள்ளன. தற்போது, 5,152 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தற்போது 2 ஆயிரம் மதுபான கூடங்கள் (பார்கள்) மட்டுமே உள்ளன. மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் ரூ.5 கோடி வரை செலவு செய்யப்பட்டு வருகிறது. இன்று மதுவின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதால், ஆண்டுக்கு அரசுக்கு ரூ.2,500 கோடி வரை வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாமக்கல்லில் புதிதாக அமையவுள்ள அரசு மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் விரைவில் நேரில்வந்து, அடிக்கல் நாட்ட இருக்கிறார். மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட்ட பிறகு நாமக்கல்லில் செயல்படும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, இம்மாவட்டத்தின் பிற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அரசு மருத்துவக்கல்லூரிக்கு இணையாக அங்கும் உயரிய சிகிச்சைகள் அளிக்கப்படும்.

தமிழகத்தில் வரும் கோடைகாலத்தில் 17 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு மின்தேவை இருக்கும். மின் உற்பத்தி திருப்தியாக உள்ளதால் மின் பற்றாக்குறை இருக்காது. மின் இழப்பைத்தடுப்பது, மின் உற்பத்திக்குச் சமமானது ஆகும் என்பதால், மின் இழப்பைத் தடுக்க மின்வாரியம் தகுந்த நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. 21 சதவீதமாக இருந்த மின்இழப்பு தற்போது 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனை 10 சதவீதமாக குறைக்க தமிழ்நாடு மின்சார வாரியம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் அவரது செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டார். தவறான நோக்கத்தில் அவர் செய்யவில்லை. ஒரு சிலர் அரசியல் காரணங்களுக்காக அதனை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதனை பெரிதாக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.