தற்போதைய செய்திகள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்

நாகப்பட்டினம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் செம்போடை ஊராட்சியில், வேளாண்மைத்துறை சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கான வாழ்வாதாரத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகளை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் இரா.பழனிகுமார் தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்ததாவது:-

“நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஜா புயலால் மிகப்பெரிய பாதிப்புக்கு இலக்காகிய விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பேணிப் பாதுகாக்கும் விதமாக விழுந்த மரங்களுக்கு ஈடாக புதிய மரங்களை உருவாக்கும் நோக்கோடு அம்மாவின் அரசு மறுசீரமைப்புப் பணிகள் என்ற வகையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் புதிதாக மரங்கன்றுகள் வழங்கப்படுகிறது.

நம் பகுதியில் வாழ்ந்து வந்த மக்களுக்கு வாழ்வளித்த மரங்களை கஜா புயல் முற்றிலுமாக அழித்துவிட்டது. கஜா புயலால் வரும் பாதிப்புகள் இந்த அளவிற்கு இருக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. வீடுகள், மரங்கள், கால்நடைகள் என அனைத்து வாழ்வாதாரங்களையும் மக்கள் இழந்து தவித்தனர். அம்மாவின் அரசு எல்லா வகையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகளை வழங்கியது. தொடர்ந்து மக்களுக்கான மறுவாழ்வுப் பணிகள், பட்டா வழங்குதல், அரசு வீடுகள் கட்டித் தர நடவடிக்கை மேற்கொள்ளுதல், மரக்கன்றுகள் வழங்குதல், சொட்டு நீர் பாசனக் கருவிகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 183 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த 26,813 தென்னை விவசாயிகளுக்குச் சொந்தமான 4,19,231 தென்னை மரங்களுக்கு ரூ.46 கோடியே 11 லட்சத்து 54 ஆயிரத்து 100 நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் வேதாரண்யம் வட்டாரத்திற்கு 12,739 தென்னை விவசாயிகளுக்குச் சொந்தமான 1,83,208 தென்னை மரங்களுக்கு ரூ.20 கோடியே 15 லட்சத்து 28 ஆயிரத்து 800 நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

செம்போடை கிராமத்தில் 502 தென்னை விவசாயிகளின் 10507 மரங்கள் புயலால் பாதிக்கப்பட்டு, அவர்களுக்கு ரூ.1 கோடியே 15 லட்சத்து 57 ஆயிரத்து 700 நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. தேத்தாக்குடி வடக்கு கிராமத்தில் 404 தென்னை விவசாயிகளின் 3281 மரங்கள் புயலால் பாதிக்கப்பட்டு, அவர்களுக்கு ரூ.36 லட்சத்து 9 ஆயிரத்து 100 நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.

இந்நிகழ்வில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கமலா அன்பழகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சுப்பையன், இ.திலிபன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.ஜெகநாதன், இணை இயக்குநர்(வேளாண்மை) சா.பன்னீர்செல்வம், உதவி இயக்குநர்(வேளாண்மை) .ஜோதிபாசு, செம்போடை ஊராட்சி மன்றத்தலைவர் மதியழகன் உட்பட வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிச்செல்வன், வட்டாட்சியர் சண்முகம் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.