தற்போதைய செய்திகள்

பொது வாழ்வில் இருந்து பின்வாங்க மாட்டோம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டம்

மதுரை

விமர்சனங்களை எதிர்கொள்ள அம்மாவிடம் பாடம் கற்றிருக்கிறோம். பொதுவாழ்வில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள தே.கல்லுப்பட்டி, பேரையூர், சுப்புலாபுரம், குன்னத்தூர், வில்லூர், கள்ளிக்குடி, செங்கப்படை, கூடக்கோவில் ஆகிய பகுதிகளில் அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இ்ந்நிகழ்ச்சியில் 1,475 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். நிகழ்ச்சியில் மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், கோட்டாட்சியர் சௌந்தர்யா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி, ஒன்றிய கழக செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், டாக்டர் பாவடியான் உட்பட பலர் கலந்து கொண்டனர்

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

மாணவப் பருவம் என்பது முக்கியமான பருவம் ஆகும். இதில் நீங்கள் நன்றாக கவனத்துடன் உழைத்தால் கல்வியில் முதன்மை பெறலாம். அதன் மூலம் உங்களை எல்லோரும் வாழ்த்துவார்கள். போர்க்களத்தில் கையில் ஆயுதம் இல்லை என்றால் எதிரிகளிடம் வெற்றி பெற முடியாது.

அதுபோல் படிக்கும் மாணவர்கள் வெற்றிபெற வேண்டுமென்றால் அவர்களுக்கு சீருடைகள், புத்தகம், நோட்புக், உணவு, மடிக்கணினி ,சைக்கிள், இவையெல்லாம் அவசியம் என்று சிந்தித்து அதை செய்து காட்டியவர் புரட்சித்தலைவி அம்மா. அதனால் தான் இந்தியாவில் உயர் கல்வி சேர்க்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அம்மாவின் வழியில் இன்றைக்கு முதலமைச்சர் மாணவ சமுதாயத்திற்கு தொடர்ந்து பல திட்டங்களை செய்து வருகிறார். நீங்கள் இதுபோன்ற திட்டங்கள் மூலம் பயன் பெற்று உலகிற்கே வழிகாட்டும் மாணவர்களாக திகழ வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்

அதனைத்தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் அனைத்து வசதிகளும் உள்ளது. நிதி உதவி செய்கின்ற ஜப்பானிய குழு 10 முறை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அந்த ஆய்வில் திருப்தித் தருவதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். சிலபேர் ஐயம் எழுப்புகின்றனர். மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த யாரும் முயற்சிக்க வேண்டாம். ஒட்டுமொத்த தமிழகத்தில் உள்ளவர்கள் வெற்றி கண்டு எய்ம்ஸ் மருத்துவமனை வர பாடுபட்டுக் கொண்டு உள்ளனர். ஆனால் ஒவ்வொருவரும் ஆடிட்டரை போன்று கேள்வி கேட்டுக் கொண்டுள்ளனர். நிச்சயமாக எய்ம்ஸ் மருத்துவமனை அமையும். அதற்கு சிறிது காலஅவகாசம் தேவைப்படும். மருத்துவமனை மூலம் உயர்தர இலவச சிகிச்சைகள் அளிக்கப்படும் என்றார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் சில பிரச்சனைகளில் சிக்குகிறார்களே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து கூறிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தொடர்ந்து எதிர்க்கட்சிகள் இப்படி பரப்ப முயல்கிறார்கள். ஆனால் தோற்றுப் போகிறார்கள். சட்டசபையில் புரட்சித்தலைவர் முதலமைச்சராக இருந்த போது கருணாநிதி இந்த பதவி நாங்கள் சாப்பிட்டு தூக்கி எறிந்த இலையை நீங்கள் இப்போது கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கூறினார். அதற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நீங்கள் சொல்வது உண்மை. நீங்கள் சாப்பிட்டு போட்ட இலையை தான் பார்க்கிறோம். ஆனால் மக்கள் பணத்தை எவ்வளவு சாப்பிட்டு உள்ளீர்கள் என்று கணக்கு பார்த்துள்ளோம் எனக் கூறினார்

எதிர்க்கட்சியினர் ஊடகங்கள் எங்களை எல்லாம் கோமாளியாக காட்டுவதற்கு முயற்சி செய்கிறார்கள். சில ஊடகங்கள் கூட சித்தரிக்கிறார்கள். எல்லாருடைய விமர்சனத்தையும் எதிர்கொள்வதற்கு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். வாரப்பத்திரிகை, தினசரி பத்திரிகைகளில் கோமாளியாக காட்டுகிறார்கள். அதற்காக பொது வாழ்க்கையில் இருந்து நாங்கள் விலகி செல்ல மாட்டோம்.

அதனை நாங்கள் எதிர்கொள்கிறோம். மேலும் விமர்சனங்கள் வராமல் இருப்பதற்கு முயற்சி செய்கிறோம். அரசுக்கு எதிராக பல்வேறு பொய் பிரச்சாரங்களை ஸ்டாலின் பரப்பி வருகிறார். யார் மக்களுக்காக உழைத்து வருகிறார்கள், யார் மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள் என்று மக்களுக்கு தெரியும். தேர்தல் காலங்களில் இவர்களுக்கு தகுந்த பாடத்தை மக்கள் புகட்டுவார்கள் என்றார்.