சிறப்பு செய்திகள்

கால்நடை ஆராய்ச்சி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டு விழா : முதலமைச்சர் & துணை முதலமைச்சர் பங்கேற்பு

சென்னை

சேலம் மாவட்டம் தலைவாசலில் சர்வதேச தரத்தில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 9.2.2020 அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டம் தலைவாசலில் 9.2.2020 காலை 9 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சர்வதேச தரத்தில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி விவசாய பெருவிழா, கண்காட்சி மற்றும் கருத்தரங்கை துவக்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா பேருரையாற்றுகிறார். இவ்விழாவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிக்கிறார். கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார். தலைமைச் செயலாளர் க.சண்முகம் வரவேற்புரையாற்றுகிறார்.

வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மை செயலாளர் வேளாண்மைத்துறை ககன்தீப்சிங்பேடி விவசாய பெருவிழா குறித்து விளக்கவுரையாற்றுகிறார். கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர், மருத்துவர் கே.கோபால் திட்ட விளக்கவுரையாற்றுகிறார். சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் சி.ஆர்.ராமன், நன்றி கூறுகிறார். இவ்விழாவில், அமைச்சர்கள், சட்டப்பேரவை துணைத்தலைவர், தமிழ்நாடு அரசின் புதுடெல்லி சிறப்பு பிரதிநிதி, நாடாளுமன்ற- சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், மாநில கூட்டுறவு வங்கித்தலைவர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.

10.2.2020, 11.2.2020 ஆகிய இரண்டு நாட்களும் சேலம் மாவட்டம் மட்டுமல்லாமல் அருகில் உள்ள மாவட்டங்களிலிருந்தும் மாணவ-மாணவிகள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு கால்நடைகளை பற்றிய பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதோடு கால்நடை கல்லூரிகளில் அவர்கள் சேர்வது தொடர்பாக பேராசிரியர்களும், கல்வியாளர்களும் வருகை தந்து எடுத்துரைக்க உள்ளனர். அதே போன்று வேளாண்மைத் துறையின் மூலம் வேளாண் துறையைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்களும் வருகை தந்து வழிகாட்ட உள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்காக சுமார் 20,000 மாணவ-மாணவிகள் வருகை தர உள்ளனர். கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, ஆடு வளர்ப்பு குறித்து கருத்தரங்கங்களும் நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கில், கால்நடைகளை வளர்க்கும் முறை, கால்நடைகளை பாதுகாத்தல், அதன் மூலம் வருவாய் பெருக்கம் குறித்தும் விரிவான கருத்துக்களை ஆராய்ச்சியாளர்கள் எடுத்துரைக்க உள்ளனர். அதே போன்று வேளாண்மைத் துறையின் மூலமாக வேளாண் துறையைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்து வேளாண்மையில் நவீன யுத்திகளை கையாளுதல், புதிய சாகுபடி முறை, நீர் மேலாண்மை, அதன் மூலம் அதிக மகசூல் பெறுவது குறித்தும் எடுத்துரைக்க உள்ளனர்.

விழாவிற்கு வருகை தர உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாய பெருங்குடிமக்கள் கால்நடை வளர்ப்பு முறை, நாட்டினங்களை பாதுகாத்தல், நாட்டு பசுக்கள், ஆட்டினங்கள், செல்லப் பிராணிகள் வளர்ப்பு, கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் ஆகியவற்றையும் அதே போன்று விவசாயத்தில் என்னென்ன புதிய ரகங்கள் உள்ளன என்பதையும், அதன் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கக் கூடிய பயன்கள் குறித்தும், நேரடியாக தெரிந்து கொள்ளும் வகையில் செயல் விளக்கமும் செய்து காண்பிக்க ஏதுவாக 200 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. அந்த கண்காட்சி அரங்கில் விவசாயத்திற்கு பயன்படக்கூடிய நவீன இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் உள்ளிட்டவையும் இடம் பெற உள்ளன.

ஒவ்வொரு அரங்கும், ஒவ்வொரு விதமாகவும், மிக பிரம்மாண்டமாகவும் அமைக்கப்பட உள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் மூலமாக சுமார் 3 லட்சம் பொதுமக்கள் வருகை தந்து கண்காட்சியை பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 15,000 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் தலைவாசலில் 9,10,11.2.2020 ஆகிய 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவிற்கு வருகை தந்து வேளாண்மை, கால்நடை ஆகியவற்றை பற்றி தெரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்பதால் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.