தற்போதைய செய்திகள்

மதுரை வடக்கு தொகுதியில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ- வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினர்

மதுரை

மதுரை வடக்கு தொகுதியில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.

மதுரை வடக்கு தொகுதியில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வினய் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் விசாகன் முன்னிலை வகித்தார். கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் பெண்களுக்கு மானிய விலையில் இரண்டு சக்கர வாகனம் உள்பட 1000 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர் தங்கம், மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், வடக்கு 2-வது பகுதி கழக செயலாளர் ஜெயவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:- 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டுறவு கடனை ரத்து செய்வோம், வங்கியில் அடகு வைத்த 5 பவுன் நகையை திருப்பிக் கொடுப்போம் என்று ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி கொடுத்தார். எதையாவது நிறைவேற்ற முடிந்ததா. இல்லாத திட்டத்தை சொல்லி மக்களிடத்தில் பொய்யான வாக்குறுதி கொடுப்பவர்கள் தான் திமுகவினர்.

திமுக ஆட்சியில் தான் கடும் மின் தட்டுப்பாடு இருந்தது. கட்டப் பஞ்சாயத்து ரவுடியிசம் போன்றவை இருந்தது. இந்த 9 ஆண்டுகளில் ஒரு நிமிடம் கூட மின் தட்டுப்பாடு இல்லை ,சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததால் தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலமாக விருது பெற்றுள்ளது. மக்கள் நம்பி நாங்கள் தேர்தல் களத்தை சந்திக்க போகிறோம். ஆனால் திமுகவோ கார்ப்பரேட் கம்பெனியை நம்பி தேர்தலை சந்திக்கப் போகிறது. ஆனால் இறுதியில் வெல்லப்போவது மக்கள் சக்திதான்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

பின்னர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ பேசியதாவது:-

தமிழகத்தில் ஒரு சிறப்பான ஆட்சியை அம்மாவின் வழியில் முதலமைச்சர் சிறப்பாக நடத்தி வருகிறார். அரசின் திட்டங்கள் எல்லாம் கடைக்கோடி மக்களுக்கும் சென்று கொண்டிருக்கிறது. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் முதியோர் உதவித்தொகை 500 ரூபாய் வழங்கப்பட்டது ஆனால் அம்மா 1000 ரூபாயாக உயர்த்தி கொடுத்துள்ளார் திமுக என்றைக்கும் மக்களைப் பற்றி சிந்திப்பது கிடையாது.

ஆனால் அம்மா அரசு ஒவ்வொரு நிமிடமும் மக்களை பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்கிறது. மதுரை மாநகராட்சிக்கு புரட்சித்தலைவி அம்மா ரூ.250 கோடி நிதி உதவி வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் மூலம் மதுரை மாநகரம் எழில்மிகு நகரமாக உருவாகும்.

இவ்வாறு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.