தற்போதைய செய்திகள்

கொமராபாளையம் நகராட்சி பகுதியில் ரூ.7 கோடியில் சாலைமேம்பாட்டு பணி – அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்தார்

நாமக்கல்:-

கொமராபாளையம் நகராட்சி பகுதியில் ரூ.7 கோடியில் சாலை மேம்பாட்டு பணிகளை அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம் கொமராபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு சாலை மேம்பாட்டு பணிகள் தொடக்க விழா, உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் பெறுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கா.மெகராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி கலந்து கொண்டு கொமராபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 14-வது மத்திய நிதிக்குழு திட்டம், தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் அபிவிருத்தி திட்டங்களின் கீழ் ரூ.7 கோடி மதிப்பீட்டில் பல்வேறு சாலை மேம்பாட்டு பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

கொமராபாளையம் நகராட்சி 18-வது சீனிக்காடு (அன்பு காலேஜ் ரோடு) சாலை, 17-வது வார்டு மாரக்காள்காடு சாலை, 16-வது வார்டு பள்ளிபாளையம் சாலை, 20-வது வார்டு தெற்கு காலனி குறுக்கு வீதி சாலை, 21-வது வார்டு தம்மண்ணன் வீதி சாலை, 5-வது வார்டு சேலம் மெயின் ரோடு சேலம் மத்திய கூட்டுறவு வங்கி முதல் ஈஸ்வரன் கோவில் வீதி வரை சாலை, 12-வது வார்டு பெரியார் நகர் (ஏ.வி.எஸ்.பள்ளி பின்புற சாலை) 2-வது வார்டு தலைமை நீரேற்று நிலையத்திற்கு தென்புற சாலை, 31-வது மற்றும் 32-வது வார்டு கலைமகள் வீதி சாலை உள்ளிட்ட பகுதிகளில் தார்சாலை அமைக்கும் பணிகளையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

பின்னர், கொமராபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 134 மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் பெறுவதற்கான ஆணைகளையும் அவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-

அம்மா அவர்களின் திட்டங்களில் ஒன்றாகிய உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்திற்கு 3,000 இருசக்கர வாகனங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக 2000 வாகனங்கள் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மொத்தம் 5,000 மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படவுள்ளது.

கொமராபாளையம் நகராட்சிக்கு 67 இருசக்கர வாகனங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது 134 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை 642 நபர்கள் இருசக்கர வாகனம் வழங்ககோரி மனுக்கள் வழங்கி உள்ளார்கள். அதில் 211 பேருக்கு ஏற்கனவே இருசக்கர வாகனம் வழங்கப்பட்டு விட்டது.

இங்கு 134 பேருக்கு இருசக்கர வாகனம் பெற ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 297 நபர்களுக்கும் இருசக்கர வாகனம் பெற ஆணை வழங்கப்படும். உழைக்கும் மகளிரின் போக்குவரத்தினை எளிதாக்கும் வகையிலும், வேலை பளுவினை குறைக்கும் வகையிலும், பொருளாதார ரீதியாக முன்னேறும் விதமாகவும், 50 சதவிகித மானியம் அல்லது ரூ.25,000 விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டு வருகிறது.

மாநிலத்திலேயே முதன் முறையாக கொமாரபாளையம் நகராட்சியில் தான் மேலே சென்ற மின்கம்பங்களை புதைவட பாதைகளாக அமைக்க அம்மா அவர்கள் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்தார். தற்போது 75 சதவிகித பணிகள் முடிவுற்றுள்ளன. அம்மா வழியில் நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சர் பொதுமக்களுக்கென பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

முதியோர் உதவித்தொகையை பொறுத்தவரையில் மனுக்கள் பெறப்பட்டு தகுதியான நபர்கள் அனைவருக்கும் 10 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும். இப்பகுதி பெண்கள், ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் பாதுகாப்பாக துணி துவைக்க எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்து 3 இடங்களில் துணி துவைக்க கல் மற்றும் பைப் லைன் அமைத்து தரப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் குமாரபாளையம் நகர கழக செயலாளரும், நகர கூட்டுறவு வங்கி தலைவருமான ஏ.கே.நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.