சிறப்பு செய்திகள்

18.64 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 9 ஆண்டில் ரூ.63,878 கோடி வங்கி கடனுதவி – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

கோவை

கடந்த 9 ஆண்டில் 18.64 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.63,878 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மண்டல அளவிலான வங்கியாளர்கள் ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

பெண்களின் முன்னேற்றத்திலும், மேம்பாட்டிலும் பெரிதும் அக்கறை கொண்டு, பல்வேறு சிறப்புத் திட்டங்களை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தால் 6.69 லட்சம் சுயஉதவிக்குழுக்கள், 100.40 லட்சம் உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகின்றன.

இக்குழுக்களின் மொத்த சேமிப்பு ரூ.7,726 கோடி ஆகும். 2011-ம் ஆண்டு முதல் இதுவரை 18.64 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.63,878 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் முயற்சியால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.26,168.24 கோடி, நடப்பாண்டில் மட்டும் ரூ.11,246.96 கோடி மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை 9810 சுயஉதவி குழுக்களுக்கு வட்டி மானியத்தொகையாக ரூ.9.94 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 89,747 இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதில் 52,785 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மாவட்டம் மற்றும் வட்டார அளவில் மொத்தம் 1,356 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டதில் 13.44 லட்சம் நபர்கள் பங்கேற்று அதில் 2.56 லட்சம் நபர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். 7,436 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ரூ.533.55 கோடி சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு முதல் ஏழை மகளிரை கொண்டு 1 லட்சத்து 12 ஆயிரத்து 110 புதிய சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2017-18 முதல் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 2 லட்சம் உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனங்கள் ரூ.500 கோடி மானியத்துடன் வழங்கப்பட்டுள்ளன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதியில் 5,742 புதிய சுய உதவி குழுக்கள் மற்றும் நகர்புற பகுதிகளில் 4,481 சுய உதவிக் குழுக்களும் மொத்தம் 10,223 சுயஉதவிக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

61,981 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1961.9 கோடி வங்கி கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை ரூ.405 கோடி வங்கி கடன் இணைப்பாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 12 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.2.28 கோடி பெருங்கடனாக வழங்கப்பட்டுள்ளது. 1020 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.153 கோடி ஆதார நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2017-18 முதல் 12,040 மகளிருக்கு ரூ.29.22 கோடி மானியத்துடன் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை கடன்பெறாத குழுக்களை திட்ட அலுவலர்கள்மூலமாக கண்டறிந்து அனைத்து குழுக்களுக்கும் கடன் வழங்க வேண்டும். கடன் பெற்ற குழுக்கள் முதல் தவணையை செலுத்திய பிறகு மறுகடன் வழங்குதல் அவசியம். கடன் அனுமதி வழங்குவதற்கும் கடன் விடுவிப்பதற்கும் உள்ள இடைவெளி நாட்கள் 10 நாட்களாக குறைக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

இதைத்தொடர்ந்து, 17 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.1.14 கோடி மதிப்பிலான வங்கி கடன் தொகையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராசாமணி, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், வி.சி.ஆறுக்குட்டி, எட்டிமடை எ.சண்முகம், ஒ.கே.சின்ராஜ், கஸ்தூரிவாசு, வி.பி.கந்தசாமி, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவன கூடுதல் இயக்குநர் கணேஷ்கண்ணா, மேலாண்மை இயக்குநர் எஸ்.பி.கார்த்திகா, மாவட்ட ஊராட்சித்தலைவர் அ.சாந்திமதி, மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் டி.கே.அமுல்கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.