தற்போதைய செய்திகள்

புரியாத புதிராக இருக்கிறார் ஸ்டாலின் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

மதுரை:-

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் புரியாத புதிராக இருக்கிறார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி வாடிப்பட்டியில் ரூ.15 கோடி மதிப்பில் சாலை திட்டப் பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.மாணிக்கம் தலைமை வகித்தார். வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு புதிய திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

மேலும் 25 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், உதவி இயக்குனர் சேதுராமன், வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாக அலுவலர் சிவகுமார், மாவட்ட கழக துணை, செயலாளர் அய்யப்பன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி, ஒன்றிய கழக செயலாளர் செல்லப்பாண்டி, ரவிச்சந்திரன், அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், முருகேசன் பேரூர் கழக செயலாளர்கள் பாப்பு ரெட்டி, கொரியர் கணேசன், அழகுராஜா, குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர் தெளிவாக விளக்கம் அளித்திருக்கிறார். பிற மாநிலங்களில் இதுபோன்ற குறைபாடுகள் ஏற்படும் போது எவ்வாறு கையாண்டு இருக்கிறார்கள். அதுபோல இங்கு தவறுகளை கண்டுபிடிக்க ஏற்ற வகையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சட்ட ரீதியான தண்டனைகள் பெற்று தரப்படும் என்று அமைச்சர் தெளிவாக கூறியுள்ளார். ஸ்டாலினை பொறுத்தவரை அவரை தவிர மற்ற அனைவரும் பதவி விலக வேண்டும். பாரத பிரதமரையும் பதவி விலக வேண்டும் என்று கூறுகிறார்.

ஸ்டாலினுக்கு காலில் கல் தடுக்கினாலும், கல் குத்தினாலும் முதலமைச்சர் மற்றும் அனைத்து அமைச்சர்களும் பதவி விலகி ஆட்சியை கலைக்க வேண்டும். காற்றடித்தாலும், கடலில் அலை அடித்தாலும், காற்று நின்று விட்டாலும், கடலில் அலை நின்று விட்டாலும் நாங்கள் தான் காரணம் என்று கூறுவார்.

கடலில் சுனாமி போல் பெரிய அலைகள் வரத்தான் செய்யும். அதனை எதிர்கொள்ளும் தயாரான நிலையை அரசு எடுக்க வேண்டும். முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு மக்களை பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பலமுறை கூறியிருக்கிறோம்.

எதிர்க்கட்சி தலைவர் சிலநேரம் எல்.கே.ஜி. படிக்கும் குழந்தை போல் ஆகி விடுகிறார். சிலநேரம் பட்டதாரி முனைவர் போல் பேசுகிறார். அவரை எந்த நிலையில் பார்ப்பது என்று எங்களுக்கு புரியாத புதிராய் இருக்கிறது. எந்நேரமும் அழுது கொண்டிருக்கும் குழந்தையை தாய் தந்தையர் கூட விரும்ப மாட்டார்கள். அதேபோல் எந்நேரமும் அழுது கொண்டு ஒப்பாரி வைக்கும் எதிர்க்கட்சி தலைவரை தமிழக மக்களும் விரும்ப மாட்டார்கள்.

ஒப்பாரி வைக்காமல் எதிர்க்கட்சி தலைவர் ஆணித்தரமாக தனது கருத்தை பதிவிட வேண்டும், விவாதிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இப்படி எப்பொழுதும் ஒப்பாரி வைக்கும் ஒரு எதிர்க்கட்சி தலைவரை நாங்கள் பார்த்ததில்லை. 14-ந்தேதி அறிவிக்கப் போகும் தமிழக பட்ஜெட்டிற்கு உங்களுடன் சேர்ந்து நானும் ஆவலாக காத்திருக்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.