தற்போதைய செய்திகள்

திண்டுக்கல்லில் 14,771 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்க இலக்கு -அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தகவல்

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 14,771 மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்க இருப்பதாக அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.

திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் மு.விஜயலட்சுமி, தலைமையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி தெரிவித்ததாவது:-

மாணவ, மாணவிகள் தரமான கல்வியை பெறுவதற்கு அம்மாவின் அரசு, பள்ளி கல்வித்துறையில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினி, விலையில்லா மிதிவண்டி, கல்வி உதவித்தொகை, மதிய உணவு, புத்தகப்பை, காலணிகள், புவியியல் வரைபடம், வண்ண பென்சில்கள், கிரையான்ஸ் உட்பட கற்றலுக்கு தேவையான 14 வகையான கல்வி உபகரணங்கள் அனைத்தையும் பாகுபாடின்றி தமிழக அரசு வழங்கி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 90,950 மாணவ, மாணவிகளுக்கு பாட நூல்கள், 75,000 மாணவ, மாணவிகளுக்கு பாட குறிப்பேடுகள், 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் 45,380 மாணவ, மாணவிகளுக்கு 1,81,520 வண்ண சீருடைகள், 12,966 மாணவ, மாணவிகளுக்கு கணித உபகரண பெட்டிகள், 26,281 மாணவ, மாணவிகளுக்கு புவியியல் வரைபடம், 37,450 மாணவ, மாணவிகளுக்கு காலணிகள், 81,904 மாணவ, மாணவிகளுக்கு வண்ண பென்சில்கள், கிரையான்கள், உயர் மற்றும் மேல்நிலைக்கல்வி இடைநிற்றலை தவிர்த்திட 1771 மாணவ, மாணவிகளுக்கு ரூ.53.13 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளன.

மேலும், 4,545 ஆசிரியர்களும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் மொத்தம் 14,771 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது.இந்த விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டதன் மூலம், தொலைதூரத்தில் சென்று பாடம் படிக்க வேண்டிய சூழல் அமையப் பெற்றுள்ளது என்பதை காரணம் காட்டி, பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிடும் சூழ்நிலை முற்றிலுமாக குறைந்துள்ளது. கடந்த 2011 முதல் 2016 வரை (5 ஆண்டுகளில்) மட்டும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் 96,788 மாணவ, மாணவிகளுக்கு ரூ.27.20 கோடி மதிப்பீட்டில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தின் மூலம் இதுவரை திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 128 பள்ளிகளைச் சார்ந்த 14,740 மாணவர்களுக்கும், 18,141 மாணவியர்களுக்கும் என மொத்தம் 32,881 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழக அரசின் மூலம் வழங்கப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று வரும் மாணவ, மாணவிகள் தங்களின் எதிர்கால நலனையும், குடும்பத்தின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு, நல்ல முறையில் கல்வி கற்று வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

இவ்விழாவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் வி.மருதராஜ், திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சி.எஸ்.ராஜ்மோகன், அபிராமி கூட்டுறவு சங்கத் தலைவர் பாரதிமுருகன், அறங்காவலர்கள் தேர்வு குழு தலைவர் பிரேம்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், தலைமை ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.