சிறப்பு செய்திகள்

கோவையில் 23-ந் தேதி மாபெரும் ஜல்லிக்கட்டு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

கோவை

கோவையில் வருகிற 23-ந் தேதி மாபெரும் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவையில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமை வகித்து பேசியதாவது:-

கோவை மாவட்டத்தில் 1979-ம் ஆண்டிற்கு பிறகு கடந்த 2018-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையடுத்து வருகிற 23–ந்தேதி கோவையில் 3-வது முறையாக ஜல்லிக்கட்டு விழா நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு விழாவை சிறப்பாக நடத்துவதற்காக ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்திட மருத்துவ துறை சார்பில் 10 குழுக்கள் அமைக்கப்படும். இக்குழுக்கள் மாடுபிடி வீரர்களுக்கு பரிசோதனை செய்யவும், காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் நியமனம் செய்யவேண்டும். ஜல்லிக்கட்டு விழாவின் போது காயமடைந்த வீரர்களுக்கு உதவிட ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

வீரர்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனை செய்து வருவாய்த் துறையினருடன் இணைந்து அனுமதிச் சீட்டு மற்றும் சீருடைகள் வழங்க வேண்டும். கழிப்பறை, குடிநீர் வசதி போதுமான அளவுக்கு ஏற்படுத்த வேண்டியது அவசியம். பார்வையாளர்கள் அமரும் கேலரி வலுவாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். மேலும் காளைகள் துள்ளிக்குதித்து பார்வையாளர் பகுதியில் செல்வதை தடுக்கும் வகையில் குறைந்தது 8 அடி உயரத்துக்கு இரட்டை தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும். எவ்வித அசம்பாவிதங்களுமின்றி ஜல்லிக்கட்டு நடைபெற பணிகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

காவல் துறை பாதுகாப்பின்போது நிர்வாக நடுவர் பங்கேற்பதற்கு ஆவன செய்ய வேண்டும். மிருகவதைத் தடுப்புச் சட்டக் கூறுகள் கடைப்பிடித்ததை உறுதி செய்ய வேண்டும். தொழுவத்திலிருந்து வாடிவாசலுக்கு கட்டவிழ்த்துவிட கொண்டு வரப்படும் காளைகளுக்கு முன்னரே மூக்கு கயிறுகள் அவிழ்க்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பந்தயத்திடலில் காளைகள் எதுவும் கயிறுடன் செல்ல அனுமதிக்கக் கூடாது. முறையாக விதிகளை பின்பற்றாத வீரர்களை களத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். 5 தீயணைப்பு வாகனங்கள், 20 தீயணைப்பு வீரர்களுடன் தீயணைப்பு மீட்புப் படையினர் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தால் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு தீயணைப்பு உபகரணங்கள் மற்றும் தீயணைப்பு குழு ஏற்பாடு செய்து அனுப்ப வேண்டும். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழாவை சிறப்பாக நடத்த அனைத்து துறை அலுவலர்களும் சிறப்பாக பணியாற்றி முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எஸ். பி.வேலுமணி பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராசாமணி, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், வி.சி.ஆறுக்குட்டி, எட்டிமடை எ.சண்முகம், ஓ.கே.சின்னராஜ், கஸ்தூரிவாசு, வி.பி.கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், மாநகர காவல் துணை ஆணையர் பாலாஜி சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பெருமாள்சாமி மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.