தற்போதைய செய்திகள்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவி அம்மா பெயர் – கழக வழக்கறிஞர் பிரிவு தீர்மானம்

சென்னை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவி அம்மா பெயர் சூட்ட தமிழக அரசு மூலம் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்க கழக வழக்கறிஞர் பிரிவு ஆலோசனை கூட்டத்தில் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து கழக வழக்கறிஞர் பிரிவு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம். தலைமைக் கழகத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கழக வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் வி.எஸ்.சேதுராமன் தலைமை தாங்கினார். கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளரும், கழக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவரும், கழக நாடாளுமன்ற மாநிலங்களவை குழுத் தலைவருமான ஏ. நவநீதகிருஷ்ணன், எம்.பி முன்னிலை வகித்தார். தென்சென்னை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் ஆர்.வி.பாபு வரவேற்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளருமான சி.பொன்னையன், கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் ஆர். கமலக்கண்ணன், கழக செய்தித் தொடர்பாளர் ஆர்.எம். பாபு முருகவேல், கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் நடிகர் போளூர் ஜெயகோவிந்தன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். முடிவில் கழக வழக்கறிஞர் பிரிவு கே.ஆர்.ரமேஷ் நன்றியுரையாற்றினார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், இதய தெய்வம், தங்கத் தாரகை, புரட்சித் தலைவிஅம்மா அவர்களின் 72-வது பிறந்த நாளை வருகிற 24-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் கழக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் நீதிமன்ற வளாகங்களுக்கு வெளியில் நலத் திட்ட உதவிகள், அன்னதானம் மற்றும் இனிப்புகளை மாணவ செல்வங்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் வழங்கி சிறப்பாகக் கொண்டாடுவது என்று கழக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் தீர்மானிக்கப்படுகிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உயர அரும்பாடுபட்ட கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோருக்கு கழக வழக்கறிஞர் பிரிவு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்ய அரும்பாடுபட்ட கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோருக்கு கழக வழக்கறிஞர் பிரிவு தனது நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர், டாக்டர் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது தன்னலமற்ற அயராத உழைப்பால், அறிவால், ஆற்றலால், தியாகத்தால் உருவான உண்மையான திராவிட இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான். தமிழ்நாட்டின் உரிமைகளை நிலை நாட்டவும், உலகெங்கும் வாழுகின்ற தமிழர்களுக்கு உறுதுணையாய் இருக்கவும், தமிழ்நாட்டில் சமூக நீதி காக்கவும், அனைத்துத் தரப்பு மக்களும் வளர்ச்சி அடைந்திட வேண்டும் என்ற லட்சியத்தோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் நடைபெற்று வருகிறது.

இந்த ஒளிவிளக்கு காலமெல்லாம் ஒளிரும் வண்ணம் கழகத் தொண்டர்கள் ஒவ்வொருவரும் கருத்தாகப் பணியாற்றிடவும், புரட்சித்தலைவி அம்மாவின் உண்மை விசுவாசிகளான கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் தீயசக்திகளின் சூழ்ச்சிகளுக்கு இடம் தராமல், விசுவாசமிக்க தொண்டர்களாக கழகப் பணிகளையும், மக்கள் பணிகளையும் தொடர்ந்து ஆற்றுவோம் என கழக வழக்கறிஞர் பிரிவு சார்பில் சூளுரை ஏற்கிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒன்றரை கோடி தொண்டர்களையும், இந்த ஆட்சியையும் தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றி உள்ளார்கள். “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்று வாழ்ந்து, தான் மறைந்த பின்னரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 100 ஆண்டுகள் ஆட்சி செய்யும் என்று சட்டமன்றத்திலே அம்மா அவர்கள் கூறிய அந்த வார்த்தைகளை மெய்பிக்கும் வகையில் தமிழகத்தில் ஆட்சி நடத்தி வரும் முதல்வரையும், துணை முதல்வரையும் பாராட்டுவதோடு அவர்ளுக்கு உறுதுணையாக எப்பொழுதும், எந்த சூழ்நிலையிலும் இருப்போம் என்பதை மனதிலே கொண்டு, நம் உள்ளத்திலே, நமது இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா! அம்மா! அம்மா! என்று எப்பொழுதும் நினைத்து கழகப் பணிகளை கடமை உணர்வோடு செய்வோம் என்று கழக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

பொங்கல் திருநாள் பண்டிகைக்கு ரூ. 1000அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழகம் முழுவதும் வழங்கிய தமிழக முதல்வர் மற்றும் தமிழக துணை முதல்வர் ஆகியோருக்கு கழக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.தமிழ்நாட்டில் மதுரையில் உலக தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைய நடவடிக்கை எடுத்த முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருக்கு கழக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

11 புதிய மருத்துவக் கல்லூரிகளை திருவள்ளூர், திண்டுக்கல், உதகமண்டலம், நாகப்பட்டினம், ராமநாதபுரம், விருதுநகர், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரே ஆண்டில் துவங்க அரும்பாடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கருக்கும், நன்றியையும், வாழ்த்துக்களையும் கழக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

2019-ல் நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி, நான்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவு தமிழக அரசியலில் ஒரு புதிய பாதையை அமைத்திருக்கிறது. நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் புரட்சித்தலைவி அம்மாவின் விசுவாசிகள் அனைவரும் விழிப்பாய் இருந்து அரசியல் பணியாற்றி மகத்தான வெற்றியைப் பெற்றுத் தந்ததைப் போல, இனிவரும் நகர்ப்புற ஊரக உள்ளாட்சி தேர்தலிலும், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் கழகம் மகத்தான வெற்றிபெறுவதற்கு கழக வழக்கறிஞர் பிரிவு களப்பணியாற்றிடுவோம் என்று சூளுரை ஏற்கிறது.

வழக்கறிஞர் நல நிதியை ரூபாய் 7 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்த முதல்வர், துணை முதல்வர், சட்டத்துறை அமைச்சர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வது, விழுப்புரம், நாமக்கல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக சட்டக் கல்லூரி உருவாக்க அரும்பாடுப்பட்ட முதல்வர், துணை முதல்வர், சட்டத்துறை அமைச்சர் ஆகியோருக்கு கழக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

முன்னாள் சட்டமன்ற பேரவைத்தலைவர் அண்ணன் பி.எச்.பாண்டியன் மறைவுக்கு கழக வழக்கறிஞர் பிரிவு தன்னுடைய இரங்கலையும், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது. மற்றும் கழக வளர்ச்சிக்கு பாடுபட்ட கழக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் மற்றும் கழக வழக்கறிஞர்கள் மறைவிற்கும் கழக வழக்கறிஞர் பிரிவு தன்னுடைய இரங்கலையும், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு டாக்டர் புரட்சித்தலைவி அம்மா (ஜெ.ஜெயலலிதா) ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்ய கழக வழக்கறிஞர் பிரிவு தமிழ்நாடு அரசு மூலம் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திட வேண்டுமென்று தீர்மானிக்கிறது.

தமிழக அரசின் நல திட்டங்களையும், கழகத்தின் செயல்பாட்டையும், பொய் குற்றச்சாட்டுக்களுடன் வஞ்சக எண்ணத்துடன் கூறுவதையும், வதந்திகளை பரப்புவதையும் தி.மு.கழக தலைவர் மு.க. ஸ்டாலினின் அநாகரிகமான செயல்களுக்கு கண்டனத்தை தெரிவித்து கழக வழக்கறிஞர் பிரிவால் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.