திருவண்ணாமலை

அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் திருவண்ணாமலை பால் உற்பத்தியாளர்கள் 4000 பேர் 50 பேருந்துகளில் சேலம் பயணம்

திருவண்ணாமலை

சேலம் தலைவாசலில் நடைபெறும் விவசாய பெருவிழாவில் திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் 4000 பேர் ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பங்கேற்கிறார்கள்.

கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளத்துறை சார்பில் சேலம் மாவட்டம் தலைவாசலில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா மற்றும் விவசாயிகள் பெருவிழா இன்று (9-ந்தேதி) நடக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார். இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

விழாவில் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோருக்கு உற்பத்தியை பெருக்குவதற்கான பல்வேறு வகையான கண்காட்சிகள் இடம் பெறுகிறது. இவ்விழாவில் திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் சார்பில் ஆவின் தலைவர் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஏற்பாட்டில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் தலைவர்கள் 4000 பேர் 50 பேருந்துகளில் சென்று பங்கேற்கின்றனர். இதற்கான அழைப்பிதழை கூட்டுறவு சங்க தலைவர்களுக்கு ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மேலாளர்கள் முனுசாமி, காளியப்பன், ஞானசேகரன், விரிவாக்க அலுவலர்கள் மற்றும் ஆவின் அலுவலர்கள், தொகுப்பு பால் குளிர்விப்பு மைய பொறுப்பாளர்கள் மற்றும் சங்க செயலாளர்கள் கலந்து கொண்டனர்.