தற்போதைய செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. விவகாரம், மு.க.ஸ்டாலின் மீது வழக்கு பாயும் : அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை

டி.என்.பி.எஸ்.சி. விவகாரத்தில் என்னை சம்பந்தப்படுத்தினால் அவர் மீது வழக்கு தொடருவேன் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

சென்னையில்  மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது
டி.என்.பி.எஸ்.சி .முறைகேட்டில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களை அரசு காப்பாற்ற முயல்வதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் பதிலளித்து கூறியதாவது:-

குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக இன்று இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு வெளிப்படை தன்மையுடன் விசாரணை நடத்தி வருகிறது. பொத்தாம் பொதுவாக உள்நோக்கம் கற்பிக்கும் விதத்தில், தமிழக அரசு மீது காழ்ப்புணர்ச்சியுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதில், தொடர்புடைய உயர் அதிகாரிகள், உயர்மட்ட பொறுப்பில் உள்ளவர்கள் யாரென்று குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

அதை சொல்வதற்கு திராணியில்லை. அரசு மீது எந்த குறையும் சொல்வதற்கு வாய்ப்பில்லை. இந்த நிலையில், பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி மக்களை திசை திருப்பி வருகிறார். ஏற்கெனவே பொய்யான தகவல்களை சொன்னதாக, பத்திரிகை மீதும், திமுக எம்.பி.தயாநிதி மாறன் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாக தகவல் தெரிந்தால் சி.பி.சி.ஐ.டி.யிடம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.

ஆனால், ஒரு தகவலை தெரிந்து கொண்டு அதனை சொல்லாமல் இருப்பதும் தவறு. சம்மன் அனுப்பப்பட்டு எப்படி விசாரித்து தகவல்களை பெற முடியுமோ, அந்த வகையில் பெறுவோம். சிபிசிஐடி விசாரணை சரியான திசையில் செல்கிறது. ஏற்கெனவே 34 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதுபோன்ற தவறுகள் வருங்காலத்தில் நடக்காததற்கு ஏற்ற நடவடிக்கைகளை டி.என்.பி.எஸ்.சி. எடுத்து வருகிறது. தயாநிதி மாறன் என்னை பதவி விலக சொல்கிறார். இதில், எனக்கு தொடர்பு இருப்பதாக சொல்லவில்லை. இவர்களை போன்று 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் கோடிக்கணக்கில் பணத்தை அடித்துவிட்டு, கடப்பாரையை விழுங்கிவிட்டு சுக்கு கசாயம் சாப்பிடும் ஆட்களா நாங்கள்? இவர்களுக்கு எல்லா துறைகளிலும் ஊழல் செய்வது கைவந்த கலை.

முதல்வர் தமிழகத்தை நன்றாக வழிநடத்துவது பிடிக்கவில்லை. அதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. ஸ்டாலின் பற்றி தான் நான் பேசுகிறேன். அதனால், நான் பதவி விலகி விட்டால், அவர் சந்தோஷப்படுவார். தொடர்ந்து மின்வாரிய தேர்வுகளிலும் முறைகேடுகள் என்பது சும்மா கிளப்பி விடுவது. இவற்றில் எந்த வகையான அடிப்படை ஆதாரமும் இல்லை. இவை கற்பனையாக புனையப்படுகின்ற குற்றச்சாட்டு. டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் ஸ்டாலின் என்னை சம்பந்தப்படுத்தினால் அவர் மீது வழக்கு தொடருவேன்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.