சிறப்பு செய்திகள்

ஜப்பான், உலக வங்கி நிதியுதவிகளுடன் தமிழக சுகாதாரத்துறை சேவை மேம்பாடு – முதலமைச்சர் தகவல்…

லண்டன்

ஜப்பான், உலக வங்கி நிதியுதவிகளுடன் தமிழக சுகாதாரத்துறை சேவை மேம்படுத்தப்படுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அந்நாட்டு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் நேற்று உரையாற்றினார். இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஒருவர் உரையாற்றியது தமிழக வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தங்கள் அழைப்பை ஏற்று இங்கிலாந்து வந்ததற்காக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

இக்கலந்துரையாடலில், இங்கிலாந்தும், தமிழகமும் பல்வேறு துறை சார்ந்த தொழில்களில் முதலீடு செய்வதற்கு உகந்த ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் பரிமாறப்பட்டன. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு துறை வல்லுநர்களிடையே உரையாற்றினார்.

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். தமிழ்நாடு மனித வளமிக்க நாடென்றும், சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ள நாடென்றும், புதிய தொழில் தொடங்கத் தேவையான அனைத்து வசதிகளும் தமிழகத்தில் உள்ளது எனவும், அரசு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்யும் எனவும் தெரிவித்தார். இன்று சுகாதாரத் துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது பெருமைக்குரியது.

இங்கிலாந்து, இந்தியா இரண்டும் நட்பு நாடுகளாகும். இதுபோன்ற ஒப்பந்தங்கள் பரஸ்பர உறவை வலுப்படுத்தும். சுகாதாரத் துறையில் குழந்தை இறப்பு விகிதம் குறைத்தல், தாய் இறப்பு விகிதம் குறைத்தல், தொற்றுநோய் கட்டுப்படுத்தல், உடல் உறுப்பு மாற்றுச் சிகிச்சை, பொது சுகாதாரம் போன்ற பல்வேறு அம்சங்களில் முன்னேறிய மாநிலம் தமிழ்நாடு.

உலகப் புகழ்பெற்ற லண்டன் கிங்ஸ் மருத்துவமனை, அதனுடைய கிளையை தமிழகத்தில் தொடங்கிடத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யுமென்றும், இரு நாடுகளின் பரஸ்பர நட்பு, வர்த்தக உறவு, சுகாதார சேவை மேம்பாடு வலுப்படுத்தப்படுமென்றும் இங்கிலாந்து பாராளுமன்ற பிரதிநிதிகளின் மத்தியில் உரையாற்றினார்.

பிறவிக் குறைபாட்டைக் கண்டறிதல், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் சர்வதேச தரத்தை தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொண்டு வருவதற்கான நல்ல தொடக்கமாக இந்தப் பயணம் அமையுமென நம்புகின்றேன். சுகாதாரத் துறையில் தற்போது உலக வங்கி உதவியுடன் ரூபாய் 2,884 கோடியும், ஜப்பான் நாட்டு உதவியுடன் ரூபாய் 1,684 கோடியும் நிதி உதவி பெற்று தமிழக சுகாதாரத் துறையின் சேவை வளர்ந்த நாடுகளுக்கு இணையாக மேம்படுத்தப்படுகிறது என தெரிவித்தார்.மேலும், தொழில் துறை சார்பாக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தயாரிக்கப்பட்ட, சிறப்பு அம்சங்கள் குறித்த குறும்படம் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு திரையிடப்பட்டது.