இந்தியா மற்றவை

பொதுத்துறை வங்கிகள் 12 ஆக குறைப்பு – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு…

புதுடெல்லி:-
நாட்டின்பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக, 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுகின்றன. இதுபற்றிய அறிவிப்பை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார்.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் (ரூ.350 லட்சம் கோடி) பொருளாதார நாடாக மாற்ற வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கனவு ஆகும்.ஆனால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நாடு பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிக்கிற வகையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 23-ந் தேதி சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். சரிவை சந்தித்து வந்த மோட்டார் வாகன தொழில் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் சலுகைகளை அவர் அறிவித்தார்.

வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதை ஊக்குவிக்கவும், பணப் புழக்கத்தை அதிகரிக்கவும் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடி மூலதனம் வழங்கப்படும் எனவும் கூறினார்.வீட்டுக்கடன், வாகன கடன் வட்டியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் டெல்லியில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில் வங்கித்துறை தொடர்பான அதிரடி அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். 10 பொதுத்துறை வங்கிகளின் இணைப்பை அவர் அறிவித்தார். அதன்படி 4 பெரிய வங்கிகளுடன், 6 சிறிய வங்கிகள் இணைக்கப்படுகின்றன. இதன்மூலம் 10 பொதுத்துறை வங்கிகள் 4 வங்கிகள் ஆகின்றன.

* பஞ்சாப் நேஷனல் வங்கியுடன், ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 2 வங்கிகள் இணைக்கப்படுகின்றன.

இது நாட்டின் 2-வது பெரிய வங்கியாக அமையும். இதன் வர்த்தக அளவு ரூ.17 லட்சத்து 95 ஆயிரம் கோடியாக இருக்கும். மொத்தமாக 11 ஆயிரத்து 437 கிளைகளை கொண்டிருக்கும்.

* கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்படுகிறது. இது நாட்டின் 4-வது பெரிய வங்கியாக திகழும்.இதன் வர்த்தக அளவு ரூ.15 லட்சத்து 20 ஆயிரம் கோடியாகும்.10 ஆயிரத்து 324 கிளைகளை கொண்டிருக்கும்.

* யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கியும், கார்ப்பரேஷன் வங்கியும் இணைக்கப்படுகின்றன. இது நாட்டின் 5-வது பெரிய வங்கியாக இருக்கும்.இதன் வர்த்தக அளவு ரூ.14 லட்சத்து 59 ஆயிரம் கோடியாக இருக்கும். 9,609 கிளைகளை பெற்றிருக்கும்.

* இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்படுகிறது. இது நாட்டின் 7-வது பெரிய வங்கியாக இருக்கும்.இதன் வர்த்தக அளவு ரூ.8 லட்சத்து 8 ஆயிரம் கோடி ஆகும்.இந்த இணைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து நாட்டில் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைந்து விட்டது.

அவை, பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி ஆகும்.

தொடர்ந்து நிர்மலா சீதாராமன் கூறுகையில், “பொதுத்துறை வங்கிகளின் லாபம் பெருகி உள்ளது. 2018-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் வாராக்கடன்கள் ரூ.8 லட்சத்து 65 ஆயிரம் கோடியாக இருந்தது. இந்த ஆண்டு மார்ச் இறுதியில் வாராக்கடன்களின் அளவு ரூ.7 லட்சத்து 90 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது” என்றார்.

கடன் வசூலும் மேம்பட்டு சாதனை அளவை எட்டி உள்ளதாகவும், 2018-19-ம் நிதி ஆண்டில் ரூ.1 லட்சத்து 21 ஆயிரம் கோடி கடன்கள் வசூலாகி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.பொதுத்துறை வங்கிகளின் வாரியத்துக்கு இனி தன்னாட்சி வழங்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

பொதுத்துறை வங்கிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து, அதன் எண்ணிக்கையை குறைப்பதின் மூலம் பொதுத்துறை வங்கிகள் வலுப்பெறும். அவற்றின் நிர்வாக செலவு குறையும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட உறுதுணையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.