திண்டுக்கல்

பாதயாத்திரை பக்தர்களை வழிமறித்து தி.மு.க.வினர் கையெழுத்து வேட்டை : சிறுவர்களையும் கட்டாயப்படுத்தி அழைத்து சென்ற கொடுமை

திண்டுக்கல்:-

திண்டுக்கல்லில் திமுகவினர் நடத்திய கையெழுத்து இயக்கத்தில் பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்களை கையை பிடித்து இழுத்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விரிவாக விளக்கம் அளித்தனர். இருந்த போதிலும் எதிர்க்கட்சிகள் தாங்கள் அரசியல் லாபத்துக்காக இஸ்லாமியருக்கு எதிரான போல் மாயைதோற்றம் உருவாக்கி அவர்களை போராட்டத்தில் ஈடுபட செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக கல்லூரி மாணவர்களையும் போராட தூண்டி விடுகின்றனர்.

தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை அறிவித்தார். அதன்படி தி.மு.க.வினர் மாநிலம் முழுவதும் கையெழுத்து வேட்டையை தொடங்கியுள்ளனர். இதற்கு பொதுமக்களிடம் ஆதரவு இல்லாததால் அவர்கள் வலுக்கட்டாயமாக மக்களை மறித்து கையெழுத்து வேட்டை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்லில் மணிக்கூண்டு அருகே நேற்று தி.மு.க.வினர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை நடத்தினர். நேற்று தைப்பூசம் என்பதால் பக்தர்கள் அதிக அளவில் திண்டுக்கல் மெயின் ரோடு மணிகூண்டு வழியாக பழனிக்கு பாதயாத்திரை செய்னர். அப்போது அவர்களை தி.மு.க.வினர் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கையெழுத்து பெற்றனர். பலர் அதனை மறுத்து சென்று விட்டனர். சிலர் எதற்காக கையெழுத்து போட்டோம் என தெரியாமலேயே கையெழுத்து போட்டனர். கையெழுத்து போட்ட விவரத்தை அறிந்த சிலர் தலையில் அடித்தபடி சென்றனர்.

ஒன்றும் தெரியாத அப்பாவி சிறுவர்களையும் தி.மு.க.வினர் விட்டு வைக்கவில்லை. அவர்களையும் கட்டாயப்படுத்தி அழைத்து சென்று கையெழுத்து போட செய்தனர். ஆனால் சிறுவர்கள் கையெழுத்துப் போட சொல்கிறார்களே என ஆனந்தத்தில் கையெழுத்து போட்டு விட்டு சென்றனர். சாலையில் சென்று கொண்டிருந்த முதியவர்களையும் கையை பிடித்து இழுத்து வந்து கையெழுத்து வாங்கினார்கள்.

இருசக்கர வாகனத்தில் குடும்பத்தினருடன் வந்தவர்களை தடுத்து நிறுத்தி கையெழுத்துப் போட்டுவிட்டு போங்கள் ஒரு கையெழுத்து தானே என கெஞ்சினர். முதிவர் ஒருவரை திமுக பிரமுகர் ஒருவர் கையை பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்து வந்து கையெழுத்துப் போட செய்தார். இந்த சம்பவங்களை பார்த்த பொதுமக்கள் முகம் சுளித்தபடி இவர்கள் அரசியல் செய்வதற்கு வேறு பிரச்சினையே இல்லையா? என நமுட்டு சிரிப்பு சிரித்தபடியே சென்றனர்.

முன்னதாக திமுகவினர் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் கையெழுத்து வாங்குவதற்காக பேரணியாக சென்றனர். அப்பொழுது போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே நின்றதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.

இதுகுறித்து இந்து முன்னணியினர் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் பொது மக்களை வலுக்கட்டாயமாக இழுத்து கையெழுத்தை திமுகவினர் வாங்குகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறாக திமுகவினர் செயல்பட்டுள்ளனர். மேலும் கையெழுத்து இயக்கம் நடத்துவதற்கு முன்கூட்டியே காவல்துறையிடம் அனுமதி வாங்கவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.

பாதயாத்திரை பக்தர்களை தி.மு.க.வினர் மறித்து வலுக்கட்டாயமாக கையெழுத்து பெற்ற சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.