தற்போதைய செய்திகள்

முதலமைச்சரின் சாதனைகளை விளக்கி கூறி வாக்கு சேகரிப்பீர் – கழக வேட்பாளர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்

மதுரை:-

முதலமைச்சரின் சாதனைகளை விளக்கி கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்று கழக வேட்பாளர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மாவட்ட கழக செயலாளரும், கழக அம்மா பேரவை செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் அங்கீகார கடிதங்களை நேற்று வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் 124 ஒன்றிய வார்டு உறுப்பினர், 13 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நம்முடன் இணைந்து கூட்டணி கட்சியினரும் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் நாம் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும். அதற்கான பணியை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.வேட்பாளராக போட்டியிடும் நீங்கள் ஒவ்வொரு வீடு வீடாக சென்று கனிவுடன் பேசி அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக முதலமைச்சர் செய்துவரும் சாதனை திட்டங்களை எடுத்துக்கூற வேண்டும். இன்றைக்கு குடிமராமத்து திட்டத்தின் மூலம் தமிழகத்தின் நீர் மேலாண்மையில் செய்த சாதனைகளையும், முதலமைச்சர் அமெரிக்கா, துபாய், லண்டன் போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழகத்திற்கு தொழில் முதலீட்டை ஈர்த்ததோடு 11 லட்சம் இளைஞர்களுக்கு வாய்ப்பினை உருவாக்கிய திட்டத்தையும், தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான எய்ம்ஸ் மருத்துவ மனையை உருவாக்கி 19 மாவட்ட மக்களின் கனவை நனவாக்கிய திட்டத்தையும், கடந்த ஆண்டு போல் தற்போதும் பொங்கல் திருநாளுக்கு பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசினை அறிவித்து அதனை தொடங்கி வைத்த திட்டத்தையும் எடுத்துக் கூற வேண்டும்.

அம்மாவின் திட்டங்களுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வண்ணம் தாலிக்கு தங்கம் 8 கிராம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இரண்டு சக்கர வாகனம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே 30 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது கூடுதலாக 5 லட்சம் பேர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கடும் மின்வெட்டு இருந்தது. தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக உருவாகி உள்ளது. முதலமைச்சரின் சிறப்பான நிர்வாக திறமையால் இந்தியாவிலேயே மத்திய அரசு விருதுகளை அதிகம் பெற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அதுமட்டுமல்லாது இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தனிநபர் வருமானம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

உங்களுக்கு இக்கூட்டத்தின் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் வாக்குகள் கேட்டு செல்லும் பொழுது இதுபோன்ற பல்வேறு திட்டங்களை மக்களுக்கு எடுத்துக்கூறுங்கள். கடந்த இரண்டு இடைத்தேர்தல்களில் முதலமைச்சர் செய்த சாதனை திட்டங்களுக்கு வெற்றியை பரிசாக மக்கள் வழங்கினர். அதேபோல் இந்த உள்ளாட்சித் தேர்தலிலும் முதலமைச்சர் சாதனை திட்டங்களை எடுத்துக் கூறினால் போதும் 100 சதவீதம் நாம் வெற்றி பெறுவோம். அந்த வெற்றிக்கனியை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் கரங்களில் சமர்ப்பிப்போம்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் நீதிபதி, எஸ்.எஸ்.சரவணன், மாவட்ட கழக துணை செயலாளர் அய்யப்பன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி, கழக அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன், செல்லப்பாண்டி, அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், பிச்சை ராஜா, ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.