தமிழகம்

சென்னையில் 12-ந்தேதி பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில் 108 ஜோடிகளுக்கு இலவச திருமணம் – துணை முதல்வர் நடத்தி வைக்கிறார்

சென்னை

சென்னையில் 12-ந்தேதி பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில் 108 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெறுகிறது. இந்த திருமணங்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைக்கிறார்.

பன்னாட்டு அரிமா இயக்கம் சார்பில்  12-ந்தேதி காலை 9 மணிக்கு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் 108 ஏழை, எளிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு அரிமாக 324 ஏ5 மாவட்ட ஆளுநர் பி.சத்தியநாராயணமூர்த்தி தலைமை வகிக்கிறார்.

முன்னாள் மாவட்ட ஆளுநரும், விழாக்குழு தலைவருமான என்.ஆர்.தனபாலன் முன்னிலை வகிக்கிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு 108 ஜோடிகளுக்கு மங்கள நாணை எடுத்துக் கொடுத்து தனது திருக்கரங்களால் இலவச திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.பென்ஜமின், க.பாண்டியராஜன், முன்னாள் மத்திய அமைச்சரும், த.மா.கா. தலைவருமான ஜி.கே.வாசன், பன்னாட்டு அரிமா இயக்குநர் ஆர்.சம்பத், தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.நடராஜன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். விழாவில் 108 ஜோடிகளுக்கு தங்கத் தாலி, மெட்ரி, பட்டுவேட்டி, பட்டு சட்டை, பட்டுசேலை, சீர்வரிசை பாத்திரங்கள், 1 மாத்திற்கான மளிகை பொருட்கள் உள்பட ஏராளமான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.