தற்போதைய செய்திகள்

மக்கள்நல திட்டங்களை நிறைவேற்றுவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது – அமைச்சர் கே.பி.அன்பழகன் பெருமிதம்

தருமபுரி

மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் பெருமிதத்துடன் கூறினார்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறைத்தீர்க்கும் திட்டத்தின் கீழ் 682 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 48 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார். இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி தலைமை வகித்தார்.

பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்களில் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த ஏழு வட்டங்களிலும் சுமார் 50 ஆயிரத்து 712 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் முனைப்போடு மேற்கொண்டு வந்தது.

தருமபுரி மாவட்டத்தில் தான் இரண்டாவது கட்டமாக பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் வட்டங்களை சேர்ந்த 4504 பயனாளிகளுக்கு ரூ.34 கோடியே 98 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தருமபுரி, நல்லம்பள்ளி பென்னாகரம் ஆகிய வட்டத்தில் 4,031 பயனாளிகளுக்கு ரூ.39 கோடியே 81 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பில், அதே போல் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டததில் 4,715 பயனாளிகளுக்கு ரூ.43 கோடியே 85 லட்சம், அதேபோல் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு வட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் 3,530 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 66 லட்சத்து 86 ஆயிரம் என மொத்தம் 20,735 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு உதவிகள் என ரூ.165 கோடியே 66 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

நான்காம் கட்டமாக அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் 503 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 41 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டுள்ளது. அரசு திட்டங்கள் மூலம் அனைத்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மேலும் வேறு மாநிலத்தில் இல்லாத பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களை விட முதியோர் உதவித்தொகை தமிழகத்தில் தான் அதிகரித்து வழங்கப்பட்டு வருகிறது. சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இன்று மட்டும் 200 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளன. பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் இதுவரையில் 5159 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 740 பேருக்கு வீடுகள் கட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பள்ளி மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி பெறும் நோக்கில் தமிழக அரசு 14 வகையான விலை இல்லா பொருட்களை வழங்கி வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் கடந்த ஓராண்டில் 12 ஆயிரத்து 338 மாணவ மாணவிகளுக்கு 4 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் தற்போது ஐந்தாவது கட்டமாக 682 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 48 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி, சமூக பாதுகாப்புத் திட்டம், இலவச வீட்டுமனைப் பட்டா, அம்மா இருசக்கர வாகனம், சலவை இயந்திரம், தையல் இயந்திரம், இலவச பூச்சி மருந்து தெளிப்பான், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கி கடன், பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் பாப்பிரெட்டிப்பட்டி ஆ.கோவிந்தசாமி, அரூர் வே.சம்பத்குமார், அரூர் சார் ஆட்சியர் மு.பிரதாப், தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் யசோதா மதிவாணன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் எம்.பொன்னுவேல், சிவப்பிரகாசம், அரசு வழக்கறிஞர் ஆர்.ஆர்.பசுபதி, அரூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தலைவர் விஸ்வநாதன், ஊராட்சி ஒன்றிக்குழுத் தலைவர் உதயா கூட்டுறவு சங்க தலைவர் மதிவாணன், வட்டாட்சியர் இளஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.