தற்போதைய செய்திகள்

1000 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தை கழகமே ஆள அயராது உழைப்போம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சபதம்

மதுரை

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தை கழகமே ஆள அயராது உழைப்போம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சபதம் மேற்கொண்டார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி கழகம் சார்பில் மாபெரும் ஆலோசனை கூட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு உசிலம்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி தலைமை தாங்கினார். ஒன்றிய கழக செயலாளர்கள் பி.ராஜா, பிச்சை ராஜா, நகர செயலாளர் பூமாராஜா, பேரூர் கழக செயலாளர் வாசிமலை, பொதுக்குழு உறுப்பினர் சுதாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் அனைத்து தொகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு தையல் மெஷின்கள், கிரைண்டர்கள், சலவைப்பெட்டி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளும், கிராமம் தோறும் அன்னதானங்களும் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும். தங்கமகள் திட்டத்தில் வங்கி சேமிப்பு கணக்குக்கான வைப்பு தொகையை 10 வயதுக்குட்பட்ட எத்தனை பேர் இருந்தாலும் அவர்களுக்கு இருப்பு தொகையை கழக அம்மா பேரவை செலுத்தும்.

அதேபோல் ஆண் குழந்தைகளுக்கு தங்கமகன் திட்டத்திற்கும் வங்கி இருப்பு தொகை செலுத்தப்படும். நாம் நடத்தும் அம்மா பிறந்தநாள் விழா மக்கள் நம்மை பாராட்டும் வண்ணம் இருக்க வேண்டும். எல்லா இடங்களிலும் அம்மாவின் திருப்பெயரால் நலத்திட்ட உதவி வழங்க வேண்டும். மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் புரட்சித்தலைவர் காலம்தொட்டு இந்த இயக்கத்திற்காக தங்களை அர்ப்பணித்து வாழ்ந்த மூத்த நிர்வாகிகளுக்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு நலிவுற்ற நல நிதி உதவி மட்டும் பாராட்டு பத்திரம் வழங்க பட உள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் பல்வேறு பொய்யான பிரச்சாரத்தை செய்தார் ஆனால் தேனி நாடாளுமன்ற தொகுதியில் கழகம் வெற்றி பெற்றது. உசிலம்பட்டி பகுதி தான் அதிக வாக்குகளை பெற்றுக் கொடுத்தது. தொண்டர்களின் உழைப்பு தான் காரணம்.

அம்மாவின் மரணத்திற்கு பின் நாம் கலங்கி நின்றோம். அப்போது நம்மை பார்த்து எதிரிகள் கொக்கரித்தனர். அப்பொழுது அம்மா அரசை முதலமைச்சர் தலைமை தாங்கி நடத்திய போது இவரால் ஒரு நாள் தாக்குபிடிக்க முடியுமா என்று கூறியவர்கள் மத்தியில் தன்னால் தாக்குப்பிடிக்க முடியும் என்று உலகமே வியந்து பாராட்டும் வண்ணம் சாமானிய தொண்டனாய் ஒரு சிறப்பான ஆட்சி செய்து வருகிறார் முதலமைச்சர் எடப்பாடியார். இந்த ஆட்சி ஆயுளை எண்ணிக் கொண்டு இருக்கிறது என்று ஸ்டாலின் கூறினார். ஆனால் திமுகவிற்கு இனி ஆயுளே இல்லை என்ற நிலையை முதலமைச்சர் உருவாக்கி உள்ளார்.

இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் ஏன் பிஜேபி ஆளும் மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி எட்டரை கோடி மக்களுக்கும் புகழ் சேர்க்கும் வகையில் இந்தியாவிலேயே மிகச்சிறந்த மாநிலமாக மத்திய அரசு நமக்கு விருது வழங்கி உள்ளது. இந்த விருதுக்கு இரவுகள் பாராது உழைத்தவர் முதலமைச்சர் ஆவார். அவருக்கு உறுதுணையாக துணைமுதலமைச்சர் இருக்கிறார்.

இரும்பு பெண்மணியாக இருந்த அம்மாவின் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக வழக்கு தொடுத்தது. அம்மா மீது வழக்கு தொடுக்காமல் இருந்திருந்தால் அவர் இன்னும் நூறு ஆண்டுகள் வாழ்ந்திருப்பார். மேலும் கழகத்தை உலகத்தை ஆளப்போகும் இயக்கமாக உயர்த்தியிருப்பார். அப்படிப்பட்ட விரோதி திமுகவுடன் நம் இயக்கத்தை அழிக்க நினைக்க இருக்கும் துரோகிகள் கைகோர்த்து கொண்டு உசிலம்பட்டி தொகுதியில் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதற்கெல்லாம் மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்.

பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் கழக தொண்டர்களையும், மக்களையும் நம்பி தேர்தல் பணியாற்றினார்கள். அவர்களது வழியையே முதலமைச்சரும் பின்பற்றி வருகிறார். ஆனால் ஸ்டாலினோ மக்களை நம்பாமலும், தனது திமுக தொண்டர்களையும் நம்பாமலும் வடநாட்டை சேர்ந்த பிரசாந்த் கிஷோரிடம் ஆலோசனை கேட்டு செயல்படுகிறார். பேறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட இயக்கத்தை பிரசாந்த் கிஷோரிடம் ஸ்டாலின் அடகு வைத்து விட்டார்.

ஆகவே அம்மாவின் 72 வது பிறந்த நாளில் நாமெல்லாம் ஒரு சபதம் மேற்கொள்ள வேண்டும். வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் 100 சதவீதம் வெற்றி பெறவேண்டும். மேலும் 2021 சட்டமன்ற தேர்தலிலும் நாம் வெற்றி பெற இன்று முதல் களப்பணி ஆற்ற வேண்டும். இப்படி உழைத்தால் 1000 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தை கழகம் தான் வாழும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இந்தகூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் க.தவசி, பாண்டியம்மாள், மாவட்ட கழக துணை செயலாளர்கள் ஐயப்பன், பஞ்சம்மாள் மாவட்ட அணி நிர்வாகிகள் திருப்பதி, வேலுச்சாமி, போத்தி ராஜா, தமிழ்செல்வன், மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள் அன்பழகன், மகாலிங்கம், முன்னாள் சேர்மன் தமிழழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.