தற்போதைய செய்திகள்

சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்கும் திட்டம் விரைவில் தொடக்கம் – அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா பேட்டி

நாமக்கல்

சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா கூறினார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம், வெண்ணந்தூரில் கழக மகளிர் அணி இணை செயலாளரும், சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சருமான டாக்டர் வெ.சரோஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 43 ஆயிரத்து 450 சத்துணவு மையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 53 லட்சம் குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். 2019-2020-ம் நிதியாண்டில் சத்துணவு திட்டத்திற்கு மாநில அரசு 1779 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

தற்போது, சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டங்கள் அமைக்கும் திட்டம் தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இட வசதியுள்ள இடங்களில் 10 ஆயிரத்து 24 சத்துணவு மையங்கள் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட வாரியாக எந்தெந்த பள்ளிகள் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடிய பள்ளிகள் என கண்டறியப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வி, வேளாண்மை, தோட்டக்கலை, சத்துணவு திட்டம் ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து, சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்த, சத்துணவு திட்டத்தின் மூலம் ரூ.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிப் பருவத்திலேயே குழந்தைகளுக்கு தோட்டங்கள் பராமரிக்கும் முறை இயற்கை முறையில் விளையும் காய்கறிகளின் பயன்பாடு சத்துணவுக்கு பயன்படும் காய்கறிகள் பச்சை காய்கறிகளை சத்துணவுடன் சமைத்து சாப்பிடும் பொழுது ஏற்படும் நன்மைகள் குறித்து அறிந்து கொள்வதற்காகவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது. இதன்மூலம் மாணவ பருவத்திலேயே சத்தான உணவு கிடைப்பது குறித்த விழிப்புணர்வு மாணவ, மாணவிகளுக்கு ஏற்படுகிறது. இதற்காக தமிழக முதல்வரின் சிந்தனையில் உதித்த இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக கடந்த நிதி ஆண்டில் மாற்றுத் திறனாளிகள் சட்டம் 2016-ன் படி திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் மாதம் 3-ம் தேதி கொண்டாடப்பட்டு, நிதி முழுமையாக பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இரண்டாயிரம் வீல் சேர்கள் அளிக்கப்பட உள்ளன. இரு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 3 ஆயிரம் பேருக்கு சிறப்பு வாகனங்கள் வழங்கப்பட உள்ளன. ஒரு கால் பாதிக்கப்பட்டவர்களும் தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி இன்னும் அதிக மாற்றுத்திறனாளிகள் இந்தத் திட்டத்தில் பயன்பெற உள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு யு.டி.ஐ.டி. எனப்படும் ஒருங்கிணைந்த பொதுவான அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் தற்போது நடைபெற்று வருகின்றன. வரும் மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் இம்முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டு, அவர்களுக்கு ஒருங்கிணைந்த தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் 45 ஆயிரம் பேருக்கு இந்த அடையாள அட்டை வழங்கப்பட உள்ளன.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா கூறினார்.