தற்போதைய செய்திகள்

பொறையாறு போக்குவரத்து பணிமனையில் ரூ.39 லட்சம் மதிப்பில் பராமரிப்பு நிலையம் – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்

நாகப்பட்டினம்

பொறையாறு போக்குவரத்து கழக பணிமனையில் ரூ.39 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பராமரிப்பு நிலையத்தை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நாகப்பட்டினம் மண்டலத்திற்குட்பட்ட பொறையார் பணிமனையில், பூம்பகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய பராமரிப்பு நிலையத்தை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரவீன் பி நாயர், தலைமை வகித்தார். பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:-

பொறையார் பணிமனை 1972-ம் ஆண்டு முதல் கூண் கட்டும் பிரிவு மற்றும் பேருந்து பராமரிப்பு பணிமனையாக செயல்பட்டு வருகிறது. இக்கிளையில் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நாகப்பட்டினம் மண்டலத்தில் எரிபொருள் செயல்திறனில் ஒரு லிட்டருக்கு 5.81 கி.மீ என்ற இலக்கினை எட்டி முதலிடத்திலும், வருவாய்ப் பெருக்கத்திலும் முதன்மை பெற்று வருகிறது.

பொறையார் கிளையில் 6 நகர பேருந்துகள், 13 புறநகர் பேருந்துகள், தொலைதூர பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் இப்பகுதி மக்களின் வசதிக்காக அதிகாலை முதலே பேருந்துகள் எல்லா வழித்தடங்களிலும் இயக்கப்படு கின்றன. இப்பணிமனையில் பணிபுரியும் சுமார் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், பாதுகாப்பாக பணிபுரியவும், ஓய்வு எடுக்கும் வகையிலும் ஓய்வுக்கூடத்துடன் இணைந்த இந்த புதிய பராமரிப்பு நிலையமானது தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நாகப்பட்டினம் மண்டல பொது மேலாளர் ஏ.எம்.மாரியப்பன், துணை மேலாளர்கள் எஸ்.இராஜா, பி.ஸ்ரீதர், கோட்ட மேலாளர் எஸ்.செந்தில்குமார், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் பி.சுந்தரராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் உள்பட அரசு அலுவலர்கள், போக்குவரத்து கழக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.