தற்போதைய செய்திகள்

கழகத்தை அழிக்க நினைக்கும் எதிரிகளுக்கு முதல்வர் சிம்ம சொப்பனமாக திகழ்கிறார் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முழக்கம்

மதுரை

கழகத்தை அழிக்க நினைக்கும் எதிரிகளுக்கு முதலமைச்சர் சிம்ம சொப்பனமாக திகழ்கிறார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் உள்ள வாடிப்பட்டியில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.மாணிக்கம் தலைமை வகித்தார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், கழக அம்மா பேரவை செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அம்மாவின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் வேண்டும் என்று ஆணையிட்டு உள்ளனர். அதன்படி மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் அன்னதானம், விளையாட்டு போட்டிகள் நலத்திட்டங்கள், மருத்துவ முகாம்கள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளை நாம் சிறப்பாக நடத்த வேண்டும்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவிற்கு பின் இந்த ஆட்சி இன்று போகும், நாளை போகும் என்று எதிர்க்கட்சிகள் கொக்கரித்தன. ஆனால் முதலமைச்சர் எடப்பாடியார் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று கழக அரசு தான் அமையும் என்ற அம்மாவின் லட்சியத்தை நனவாக்கி வருகிறார். நமது இயக்கத்தை அழிக்க நினைக்கும் எதிரிகளுக்கு முதலமைச்சர் சிம்ம சொப்பனமாக உள்ளார்.

மிக விரைவில் நகரப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சோழவந்தான் தொதியில் முதலமைச்சரின் சாதனைகளை எடுத்துக்கூறி கழகத்தை 100 சதவீதம் வெற்றி பெற வைப்போம் என்று அம்மா பிறந்த நன்னாளில் சூளுரை ஏற்றுக் கொள்வோம். கிளை கழக செயலாளராக பொது வாழ்வில் தன்னை இணைத்துக் கொண்டு படிப்படியாக உயர்ந்து இந்திய தேசத்திற்கு வழிகாட்டு மாநிலமாக தமிழகத்தை உயர்த்திய தொண்டன் என்ற பெருமையை முதலமைச்சர் பெற்றுள்ளார்.

ஆனால் திமுகவில் எனக்கு பின்னால் இவர் தான் வர வேண்டும் என்று கூறுகிறார்கள். மக்கள் விருப்பத்தை அவர்கள் கேட்கவில்லை. திமுகவில் எத்தனை முறை உட்கட்சித் தேர்தல் நடந்தாலும் உதயநிதி தான் வரப்போகிறார். எதற்கு திமுக உட்கட்சித் தேர்தல். இது திமுக தொண்டனை ஏமாற்றும் செயலாகும். வரும் சட்டமன்ற தேர்தலில் நீங்கள் அயராது பாடுபட்டு வெற்றியை பெற்றுக் கொடுத்தால் திமுக அதன்பின் இருக்காது. ஆகவே இந்த எந்த தியாகம் செய்தாலும் எதிர்க்கட்சியை நீங்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர் அய்யப்பன், மாவட்ட கழக இணை செயலாளர் பஞ்சம்மாள், ஒன்றிய கழக செயலாளர்கள் செல்லப்பாண்டி, ரவிச்சந்திரன், முருகேசன், பேரூர் கழக செயலாளர்கள் பாப்புரெட்டி, கொரியர் கணேசன், அழகுராஜா, குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.