தற்போதைய செய்திகள்

அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களும் ஏப்ரல் மாத இறுதிக்குள் கணினி மயம் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்

வேலூர்:-

அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களும் ஏப்ரல் மாத இறுதிக்குள் கணினி மயமாக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி வெலக்கல் நத்தத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வெலக்கல்நத்தம் 39 வது கிளை மற்றும் வேலூர் மாவட்டம் பரதராமி 40 வது கிளை, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கிளைகளில் தானியங்கி ஏ.டி.எம். இயந்திரங்களையும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் செயல்படும் நியாய விலைகடைகளில் புவனேஸ்வரிபேட்டை, வாலாஜா சிப்காட், நெல்லூர்பேட்டை, பிச்சனூர்,

குடியாத்தம் டெக்ஸ்டைல், வாணியம்பாடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கடை, காட்பாடி நகரமைப்பு கடை, வேலூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கடை என மொத்தம் 8 சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகளையும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஐூ, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் ஆகியோர்  பயன்பாட்டிற்காக திறந்து வைத்து 5778 பயனாளிகளுக்கு ரூ.20 கோடியே 14 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பிலான பயிர் கடனுதவிகள், சிறுவணிக கடன், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடனுதவிகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:- 

தமிழகத்தில் உள்ள 23 மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கிகளின் கீழ் ஏற்கெனவே உள்ள 881 கிளைகளை சேர்த்து தற்போது 882 மற்றும் 883 கிளைகள் தொடங்கப்பட்டுள்ளது. புதியதாக ரூ.15.1 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள 124 புதிய கிளைகளுக்கு அடுத்தபடியாக 125 மற்றும் 126 கிளைகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே சிறப்பாக செயல்படும் கூட்டுறவு துறையாக தமிழக கூட்டுறவுத்துறை செயல்பட்டு வருகிறது.

கூட்டுறவு கடன் சங்கங்கள் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் கணினி மயமாக்கப்படும். தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை பெறும் முதியோர்களுக்கு மாதம் ரூ.1000 கூட்டுறவு வங்கிகள் மூலம் தேனி மாவட்டத்தில் மட்டும் சோதனை முறையில் செயல்படுத்தி வழங்கி வருகிறோம்.

இதன் சாதக பாதகத்தை பொறுத்து தமிழகம் முழுவதும் இத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும். இந்தியாவில் எந்த இடத்திற்கும் பண பரிவர்த்தனையை கூட்டுறவு வங்கிகள் மூலம் செய்யும் வசதிகளை தமிழக கூட்டுறவுத்துறை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 23 மத்திய கூட்டுறவு வங்கிகளில் கடந்த ஆட்சிக்காலத்தில் ரூ.26,245 கோடி மட்டுமே இருப்புத் தொகையாக இருந்தது. ஆனால் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 31.12.2019 அன்று வரை ரூ.56,106 கோடி கூட்டுறவு வங்கிகளில் இருப்புத்தொகையாக வைக்கப்பட்டுள்ளது. இதுவே மக்களின் நம்பிக்கைக்குரிய வங்கியாக கூட்டுறவு வங்கிகள் உள்ளது. தமிழகம் முழுவதும் பயிர்க்கடனுதவி 2011-ம் ஆண்டு முதல் 22.01.2020 வரை 91,60,351 பயனாளிகளுக்கு ரூ.48,960 கோடி வழங்கியுள்ளோம்.

நடப்பாண்டில் முதல்வர் ஆணையின்படி ரூ10 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்து தற்போது வரை 10,01,729 பயனாளிகளுக்கு ரூ.7,170 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. வேலூர் மண்டலத்தில் 2011 முதல் 22.01.2020 வரை 6,17,153 பயனாளிகளுக்கு ரூ.2,984.91 கோடியும் நடப்பாண்டில் 61,040 பயனாளிகளுக்கு ரூ.372.85 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மீது அக்கறை கொண்ட அரசாக தமிழக அரசு செயலாற்றி வருகிறது.

அதனடிப்படையில் விவசாயிகளின் நலன் காக்க தானே புயல், வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம், பயிர்கடன் தள்ளுபடி, குறுவை சம்பா சாகுபடி தொகுப்பு, பயிர் காப்பீடு இழப்பீடு போன்ற வகையில் தமிழகம் முழுவதும் 1 கோடியே 19 லட்சத்து 88 ஆயிரத்து 271 நபர்களுக்கு ரூ.18,261.77கோடி நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

அம்மா அவர்கள் ஆட்சியில் வணிகர்களின் நலனை காக்க ரூ.5 ஆயிரம் வட்டியில்லா கடனுதவியை தற்போதைய முதல்வர் ரூ.50 ஆயிரமாக வழங்கியுள்ளார். அதனடிப்படையில் 31.12.2019 வரை 15,41,279 நபர்களுக்கு ரூ.1866.66 கோடியும் வேலூர் மண்டலத்தில் 40,150 நபர்களுக்கு ரூ.48.15 கோடி சிறுவணிக கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்திய முதல் மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. 31,43,921 நபர்களுக்கு ரூ.7232 கோடி மதிப்பிலான பயிர் காப்பீடுகளை செய்து விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.ப.சிவன்அருள், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர்கள் ம.அந்தோணிசாமி, கூடுதல் பதிவாளர் மற்றும் மாமண்டல அலுவலர் பி.லோகநாதன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு மற்றும் த.வேலழகன், டி.டி.குமார், சி.ஏழுமலை, ஆர்.வெங்கடேசன், ஏ.ஆர்.ராேஜந்திரன், க.ஆனந்தன், கே.ஜி.ரமேஷ், ஆர்.ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.