தற்போதைய செய்திகள்

குரூப் 4 தேர்வில் முறைகேடு திமுக ஆட்சியில் விதைக்கப்பட்ட பார்த்தீனியம் செடிகள் – அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு திமுக ஆட்சியில் விதைக்கப்பட்ட பார்த்தீனியம் செடிகள் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் நேற்று அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவேரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்து உள்ளார். டெல்டா மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் மகிழ்ச்சி கொள்ளும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டு உள்ளார். இந்த அறிவிப்பால் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கும்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டும் வயிற்றில் புளியை கரைக்கிறது. வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ள விவரங்கள் அனைத்தும் விரைவில் வெளியிடப்படும்.

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு என்பது திமுக ஆட்சிக் காலத்தில் விதைக்கப்பட்ட பார்த்தீனிய செடிகள். அவர்கள் அன்று செய்த தவறை இன்று நாங்கள் களை எடுத்து வருகிறோம். கிட்டத்தட்ட 35 பேருக்கு மேல் கைது செய்து எதிர்காலத்தில் எந்த ஒரு சிறு தவறும் நடக்காத வகையில் அரசு நடவடிக்கை அரசு எடுத்து வருகிறது.டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்கில் ஐயப்பன் என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். காங்கிரசில் இருந்து திமுக சென்று அங்கு பிரச்சார பிரங்கியாக உள்ள அப்பாவுவின் கூட்டாளி தான் ஐயப்பன். இதற்கு அப்பாவு, எல்போர்டு உதயநிதி, முந்திரிக்கொட்டை. மு.க. ஸ்டாலின் என்ன பதில் சொல்ல போகிறார்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.