தற்போதைய செய்திகள்

வேலூரில் அரசு பொருட்காட்சி தொடக்கம் – மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதி

வேலூர்:-

வேலூரில் அரசு பொருட்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கண்டு களிக்கலாம்.

அரசின் திட்டங்களை பொதுமக்கள் பார்த்து பயனடையும் வகையில் தமிழக அரசு செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் வேலூர் ஸ்ரீ கிருபா வர்த்தக மைதானத்தில் (குறள் சிலம்பு திரையரங்கம் எதிரில்) அமைக்கப்பட்டுள்ள பொருட்காட்சியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று முன்தினம் தொடங்கி வைத்து பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு ஏழை, எளிய மக்களுக்கு செயல்படுத்தும் திட்டங்களை எல்லாம் மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் இதுபோன்ற பொருட்காட்சிகள் அமைக்கப்படுகிறது. இதன்வாயிலாக செய்தி மக்கள் தொடர்புத்துறை அரசின் திட்டங்கள் குறித்து பல்வேறு வகையில் மக்களுக்கு கொண்டு செல்கிறது. ஆகவே பொதுமக்கள் இந்த பொருட்காட்சியை பார்த்து அரசு திட்டங்களை அறிந்து கொண்டு பயனடைய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

இவ்விழாவில் 600 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 63 லட்சத்து 48 ஆயிரத்து 422 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த பொருட்காட்சியில் 27 அரசு துறைகளும், 10 அரசு சார்பு நிறுவனங்களும் தங்கள் துறை சார்ந்த செயல்பாடுகளை அரங்குகளில் விளக்கியுள்ளனர். அரசு பொருட்காட்சியில் நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15-ம், சிறுவர்களுக்கு ரூ.10-ம், மாணவ,– மாணவிகளுக்கு ரூ.5ம் வசூலிக்கப்படவுள்ளது. 45 நாட்கள் நடைபெறும் இந்த பொருட்காட்சியை தினமும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம்.

முன்னதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அ.சண்முகசுந்தரம் வரவேற்றார். முடிவில் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் பொ.சங்கர் நன்றி கூறினார்.