தற்போதைய செய்திகள்

ஆரணி- சேவூர் தேசிய சாலையில் 71 எல்.ஈ.டி. உயர்மின் விளக்குகள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் இயக்கி வைத்தார்

திருவண்ணாமலை

ஆரணி- சேவூர் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.5- லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 71 எல்.ஈ.டி. உயர் மின் விளக்குகள் சேவையை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சி அண்ணா சிலை முதல் சேவூர் ஊராட்சி வரை தேசிய நெடுஞ்சாலையில், மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினரின் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2019-2020-ம் ஆண்டு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 71 எல்.ஈ.டி. உயர்மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உயர்மின் விளக்குகள் சேவையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். இராமச்சந்திரன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று இயக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் இல. மைதிலி, நகராட்சி பொறியாளர் ஆர்.கணேசன், அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஆரணி வேலூர் சாலை, சேவூர் பேருந்து நிறுத்தம் சந்திப்பில் 6 எல்.ஈ.டி. தெரு விளக்குகள், சேவூர் – ஆரணி புறவழிச் சாலை சந்திப்பில் 8 எல்.ஈ.டி. தெரு விளக்குள், ஆரணி நகராட்சி மாம்பழம் பரம் சந்திப்பு – வேலூர் சாலையில் 17 எல்.ஈ.டி. தெரு விளக்குகள், ஆற்காடு – விழுப்புரம் சாலை பழைய பேருந்து நிலையம் வரை 30 எல்.ஈ.டி. தெரு விளக்குகள், ஆரணி நகராட்சி அண்ணா சிலை சந்திப்பு சூரியகுளம் அருகில் 10 எல்.ஈ.டி. தெரு விளக்குகள், என மொத்தம் 71 எல்.ஈ.டி. தெரு விளக்குகள் சாலையின் நடுவில் தடுப்புச் சுவரில் அமைக்கப்பட்டுள்ளது.