கோவை

மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க வெள்ளி விழா – சமூக ஆர்வலர் எஸ்.பி. அன்பரசன் பங்கேற்பு…

கோவை:-

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தின் வெள்ளி விழா மற்றும் ஆண்டு விழா நேற்று அவிநாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது. இவ்விழாவில், சிறப்பு விருந்தினர்களாக மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார், நல்லறம் அறக்கட்டளைத் தலைவரும், சமூக ஆர்வலருமான அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில் நல்லறம் அறக்கட்டளைத் தலைவர் அன்பரசன் பேசுகையில், “கோவையில் ஏராளமான ரிசர்வ் சைட்டுகள் இருக்கின்றன. இந்த சைட்டுகளை தத்தெடுத்து, பசுமை நிறைந்த பூங்காக்களாக மாற்ற ஒப்பந்ததாரர்கள் முன்வர வேண்டும். ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய பில் தொகைகளை முடிந்த அளவிற்கு துரிதமாக வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வழங்கிட வேண்டும். அப்போதுதான், நகரின் வளர்ச்சி உறுதி செய்யப்படும். கோவை மாநகரின் வளர்ச்சிக்கு ஒப்பந்ததாரர்கள் உறுதுணையாக செயல்பட வேண்டும்,” என அப்போது வேண்டுகோள் விடுத்தார்.

இதன் பின்னர் கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் பேசியதாவது :- 

40 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கோவை கண்டு வருகிறது. கோவையில் பாதாளச் சாக்கடை திட்டம், 24 மணிநேரம் குடிநீர் வழங்கும் திட்டம் ஆகியவை சிறப்பான வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. ஒப்பந்ததாரர்களுக்கு பில்கள் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, சி.எஸ்.ஆர். நிதியுதவியுடன் அங்கன்வாடி மையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஒப்பந்ததாரர்களின் இத்தகைய பணிகள் பாராட்டுக்குரியது. மேலும், பல பள்ளிகளையும், அங்கன்வாடி மையங்களையும் தத்தெடுத்து, அவற்றின் தரத்தை மேம்படுத்த ஒப்பந்ததாரர்கள் முன்வர வேண்டும், என்றார்.

இதன் பின்னர் ஒப்பந்ததாரர்கள் சங்க செயலாளர் சந்திர பிரகாஷ் பேசும்போது, “ஆண்டுதோறும் சங்கம் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றின் மூலமாக அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மேம்படுத்தப் படுகின்றன. இதனை தவிர ஆண்டுதோறும் மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒப்பந்ததாரர்களுக்கான பில்களை உடனுக்கு உடன் வழங்க மாநகராட்சி நிர்வாகம் ஆவன செய்ய வேண்டும். குறிப்பாக, அனைத்து ஒப்பந்ததாரர்களும் 10 சதவீத இலாபத்தை அடைவது உறுதி செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், ஒப்பந்ததாரர்களின் வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில், சங்க உறுப்பினர்கள் சர்வதேச வர்த்தக கண்காட்சிகளில் பங்கேற்பதை ஊக்கப்படுத்தி வருவதாகவும், ஒப்பந்ததாரர்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் சங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது, என்றார். இந்த விழாவில், கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் தலைவர் உதயகுமார், செயலாளர் சந்திர பிரகாஷ், பொருளாளர் அம்மாசையப்பன், துணைத் தலைவர் ராஜகோபால், துணை செயலாளர் மைக்கேல், துணைப் பொருளாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.