சேலம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் – சேலத்தில் இருந்து இருதயம், நுரையீரல் விமானத்தில் சென்னை பறந்தது

சேலம் 
சேலம் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக ெபறப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருமாகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஜெயகுமார் என்பவரின் மகன் சுரேந்திரன். 20 வயதான இவர் சேலம் வாழப்பாடி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி, தனது சொந்த ஊருக்கு சென்று விட்டு, இரு சக்கர வாகனத்தில் சேலம் திரும்பி கொண்டிருந்தார்.

வாழப்பாடி அருகே உள்ள ஏத்தாப்பூர் என்ற பகுதியில் வந்தபோது லாரி மோதியதில் பலத்த காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை அவர் மூளை சாவு அடைந்து விட்டது. மேலும் வாலிபர் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்று மருத்துவர்கள் அறிவித்ததை தொடர்ந்து, வாலிபரின் உடல் உறுப்புகளை தானம் செய்திட அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து வாலிபர் சுரேந்திரனின் உடலில் இருந்து இருதயம், கல்லீரல், நுரையீரல், கண்கள் உள்ளிட்ட 7 உறுப்புகளை எடுக்க முடிவு செய்யப்பட்டு நேற்று காலை அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் வாலிபரின் உடலில் இருந்து எடுக்கப்படும் உறுப்புகள் எங்கெங்கு அனுப்புவது என்று அரசு மருத்துவர்கள முடிவு செய்தனர். ஏற்கனவே பதிவு செய்து வைத்ததன் அடிப்படையில் இருதயம் சென்னையில் குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும் அங்கே சிகிச்சை பெற்று வரும் மற்றொருவருக்கு நுரையீரல் கொடுக்க அனுப்ப முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வாலிபரின் இருதயம் குறிப்பிட்ட காலத்திற்குள் சென்னை செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதன் காரணமாக இருதயம் மற்றும் நுரையீரல் சேலத்தில் இருந்து சென்னை செல்லும் விமானம் மூலமாக எடுத்து செல்ல முடிவு செய்யப்பட்டு, காலை அறுவை சிகிச்சை செய்திட மருத்துவர்கள் தயாராகினர்.

மேலும் இது குறித்து காவல்துறை மற்றும் சென்னை குளோபல் மருத்துவமனை மருத்துவர்கள் என அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் இருந்து 7 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்து இருதயத்தை எடுத்து செல்ல அனைத்து வசதிகளும் கொண்ட ஆம்புலன்சுடன் தயாராக வந்து இருந்தனர்.

இதனிடயே சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து விமான நிலையம் உள்ள கமலாபுரம் பகுதி சுமார் 24 கிலோ மீட்டர் என்பதால், ஆம்புலன்ஸ் வேகமாக செல்ல காவல்துறையினரின் உதவியை மருத்துவர்கள் நாடினர். இதனையடுத்து அறுவை சிகிச்சை முடிந்து காலை 11.11 மணியளவில் மருத்துவமனையில் இருந்து இருதயம் மற்றும் நுரையீரல் ஆம்புலன்சில் புறப்பட்டது. இதற்காக ஆம்புலன்ஸ் செல்லும் வழியான மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வின்சென்ட், அஸ்தம்பட்டி, ஐந்து ரோடு, போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ் வேகமாக சென்று சுமார் 15 நிமிடத்தில் விமான நிலையத்தை அடைந்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் விமானம் மூலமாக இருதயம் மற்றும் நுரையீரல் சென்னைக்கு எடுத்து செல்லபட்டது. இதே போன்று கோவைக்கு சிறுநீரகமும், எலும்பு மற்றும் தோல் ஆகியவை அனுப்பி வைக்கபட உள்ளன. சேலம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு கல்லீரல் அனுப்பபட்டது.

இந்த நிலையில் சென்னை செல்லும் விமானத்தில் தமிழக ஆளுநர் செல்வதற்காக சேலத்தில் இருந்து பாதுகாப்பு வாகனங்களுடன் சென்ற நிலையில், இருதயம் எடுத்து சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு ஆளுநர் சென்ற வாகனம் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் வழி விடவே, ஆம்புலன்ஸ் வாகனம் விரைந்து சென்றது.

இது குறித்து வாலிபரின் தந்தை ஜெயகுமார் கூறுகையில், தனது மகன் உயிர் இழந்தாலும், அவரின் உறுப்புகள் உயிரோடு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், உடல் உறுப்புகளை தானம் செய்திட முடிவு செய்ததாகவும், அவரது உறுப்புகள் சென்னைக்கும், கோவைக்கும் சேலம் ஆகிய பகுதியில் சிகிச்சை பெறுபவர்களுக்கு பொருத்திட உள்ளதாகவும், இது போன்று அனைவரும் உடல் உறுப்புகளை தானம் செய்திட முன்வர வேண்டும் என்று கூறினார். திரைப்படத்தில் வருவது போன்று போக்குவரத்து நிறுத்தப்பட்டு குறிப்பிமடட காலத்தில் விமான நிலையத்திற்கு இருதயம் மற்றும் நுரையீரல் ஆகியவை கொண்டு செல்லப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..