சிறப்பு செய்திகள்

1503 பேருக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிநியமன ஆணை – முதலமைச்சர் வழங்கினார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று முகாம் அலுவலகத்தில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1503 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 9 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாணவ, மாணவியரும் தரமான கல்வியை பெற்று சிறந்து விளங்கிட வேண்டும் என்ற உயரிய நோக்கில், கட்டணமில்லா கல்வி, விலையில்லா பேருந்து பயண அட்டைகள், மிதி வண்டிகள், சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், மடிகணினிகள், கல்வி உபகரணப் பொருட்கள், இடைநிற்றலை குறைக்க ஊக்கத்தொகை வழங்குதல், சிறந்த கல்வியை மாணவர்கள் தங்கு தடையின்றி பெற்றிடும் வகையில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல், புதிய பாடத்திட்டங்கள் வடிவமைத்தல், கட்டணமில்லா உதவி மையம், கல்விச் சுற்றுலா போன்ற பல்வேறு திட்டங்களை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 12.6.2019 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டு, தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 27.9.2019, 28.9.2019 மற்றும் 29.9.2019 ஆகிய மூன்று நாட்கள் தேர்வுகள் நடத்தப்பட்டன.

அதன்படி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 1503 நபர்களுக்கு 9.2.2020 மற்றும் 10.2.2020 ஆகிய நாட்களில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் கல்வி மேலாண்மை தகவல் மையம் மூலமாக கலந்தாய்வு நடத்தப்பட்டன. அதன் அடிப்படையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 1503 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று 9 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா.வளர்மதி, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் திட்ட இயக்குநர் ஆர்.சுடலைக்கண்ணன், பள்ளிக் கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் க.லதா, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.