சிறப்பு செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை

தமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் பரவியது. இதன் பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது. இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. உலகின் பிற நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் சுகாதாரத்துறை டாக்டர் சி. அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. கொரோனா பாதிப்பு சந்தேகத்தின் பேரில் 42 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. 42 பேரில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லைப் பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவு உள்ளது, எந்த தட்டுப்பாடும் இல்லை.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.