தற்போதைய செய்திகள்

பொதுமக்களின் மனுக்கள் மீது செப்டம்பர் இறுதிக்குள் தீர்வு – அமைச்சர் வெ.சரோஜா தகவல்…

நாமக்கல்:-

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது செப்டம்பர் இறுதிக்குள் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் வெ.சரோஜா தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி, பொன்னர் சங்கர் திருமண மண்டபத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாம் நாமக்கல் சார் ஆட்சியர் சு.கிராந்தி குமார் பதி தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் கழக மகளிர் அணி இணைச் செயலாளரும், சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சருமான மருத்துவர் வெ.சரோஜா கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்பட்டு வருகின்ற முதலமைச்சர் பொதுமக்களின் குறைகளை விரைந்து தீர்க்கும் பொருட்டு முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தினை 19.08.2019-ந் தேதியன்று சேலம் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் முழுவதும் முதலமைச்சரின் சிறப்பு குறைத்தீர்க்கும் திட்ட முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாமானது அரசாங்கமே மக்களை நோக்கி சென்று, மக்களின் குறைகளை மனுக்களாக பெற்று விரைவில் குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வு வழங்கப்படக்கூடிய திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் செப்டம்பர் மாத இறுதிக்குள் தீர்வு வழங்கப்படவுள்ளது.

ராசிபுரம் வட்டத்தில் இதுவரை இலவச வீட்டுமனை பட்டா வேண்டி 991 மனுக்களும், முதியோர் ஓய்வூதிய தொகை வேண்டி 2215 மனுக்களும், விதவை உதவித்தொகை வேண்டி 27 மனுக்களும், குடும்ப அட்டை வேண்டி 37 மனுக்களும், பட்டா மாறுதல் வேண்டி 182 மனுக்களும், 209 இதர மனுக்கள், பிறதுறையை சார்ந்த 417 மனுக்கள் என மொத்தம் 4109 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. இந்த மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு ஒரு மாத கால அளவிற்குள் நலத்திட்டங்கள் வழங்கப்படவுள்ளது. இம்முகாமினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் எம்.கணேஷ், ராசிபுரம் நகர கழக செயலாளரும், முன்னாள் நகர மன்ற தலைவரும், ராசிபுரம் நகர வங்கி தலைவருமான எம்.பாலசுப்ரமணியன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன், தனி வட்டாட்சியர் பாஸ்கரன், ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கி சட்ட ஆலோசகர் ஜி.பூபதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், வருவாய்த்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.