தற்போதைய செய்திகள்

அங்கன்வாடி பணியாளர்கள் 1664 பேருக்கு ஸ்மார்ட் போன்கள் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்…

மதுரை:-

மதுரையில் 1664 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் போன்களை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்.

மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் 1664 அங்கன்வாடி பணியாளர்களுக்கு தலா ரூ.10,000 மதிப்பில், மொத்தம் ரூ.1,66,44,000 மதிப்பிலான தொடுதிரை கைப்பேசிகளை மாவட்ட ஆட்;சித்தலைவர் த.சு.ராஜசேகர் தலைமையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

தமிழ்நாட்டில் 54,439 அங்கன்வாடி மையங்களில், பணியாளர்கள் பணிபுரிகின்றனர். மதுரையில் 2101 அங்கன்வாடி மையங்களில் 3515 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். 2019-2020-ம் ஆண்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கு மட்டும் ரூ.2606.31 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அங்கன்வாடி மையங்கள் மூலம் 72 மாத குழந்தைகள், வளர் இளம் பெண்கள் கர்ப்பிணி பாலூட்டும் தாய்மார்கள் பயனடைகின்றனர். அங்கன்வாடி மையங்களுக்கென புதிய கட்டடங்களும், நவீன சமையலறைகளும் கட்டப்பட்டுள்ளன. அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.300 மதிப்பிலான கொசுவலையும், ரூ.360 மதிப்பிலான கோரைப்பாய்களும் வழங்கப்படுகிறது.

அம்மா அரசு பெண்களின் நலனில் அக்கறைக்கொண்டு அம்மா குழந்தைகள் நல பரிசுப்பெட்டகம் வழங்கப்படுகிறது. இதில் 16 வகையான பொருட்கள் அடங்கும். ஆண்டுக்கு 6.7 லட்சம் குழந்தைகள் இதன் மூலம் பயன்பெறுகின்றனர். மேலும் பெண்களுக்காக அனைத்து மகளிர் காவல் நிலையம், பெண்கள் கமாண்டோ படை, சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி போன்ற பல்வேறு வகையான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கறவைப்பசுக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2011-ம் ஆண்டு முதல் 07.02.2019 வரை 75,448 பசுக்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டதிற்காக 2019-2020ம் நிதியாண்டில் ரூ.49.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2011-ம் ஆண்டு முதல் 07.02.2019 வரை 8.72 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு ரூ.34.85 லட்சம் மதிப்பிலான ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது. 2019-20-ம் நிதியாண்டில் இத்திட்டத்திற்காக ரூ.198.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா, மதுரை மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் எம்.எஸ்.பாண்டியன், பாண்டியன் சூப்பர் மார்க்கெட் தலைவர் ராஜா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் பூங்கொடி அவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.